செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வுக்காக அழகர் கோயிலில் இருந்து கடந்த 10 ஆம் தேதி தங்கப் பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், 11 ஆம் தேதி எதிர் சேவையான நிலையில், 12ஆம் தேதி அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விழாவின் 6ஆம் நாள் சிகர நிகழ்வாக வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதன் பின் நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய கள்ளழகருக்கு தசாவதாரம் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் 7ஆம் நாள் திருவிழாவின் மாலை நிகழ்வாக கள்ளழகர். ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் அழகர் வீரராகவ பெருமாள் சந்திப்பு மண்டகப்படிகளில் ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளினார்.
மதுரைக்கு தான் வந்த தடத்தை அழகர் மலைக்கு திரும்பும் முன் அழகர் காண வருவதாகவும், மலைக்கு திரும்பும் அழகரை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்பதோடு, மதுரை மாநகரை சார்ந்தவர்கள் தரிசிப்பதற்காக மட்டுமே அழகர் மீண்டும் வைகையாற்றுக்கு வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். வைகையாற்றினுள் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.