செய்தியாளர்: செ.சுபாஷ்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 11-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் சப்தாவர்ணம் சப்பரத்தில் காலையில் நடைபெற்ற தேரோட்டத்தின் தடம் பார்க்கும் நிகழ்வாக நான்கு மாசி வீதிகளிலும் வீதியுலா வந்தனர், இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.