இந்திய விமானங்கள் செல்ல தடை.. வான்வெளியை மூடிய பாகிஸ்தான்! பயணிகள் பாதிப்பு!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. இதற்கு எதிர்வினையாக இந்திய விமானங்களை தனது வான்வெளியில் அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு செல்லவேண்டிய விமானங்கள் தொலைதூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணதூரம் அதிகரித்து கட்டணங்கள் உயர்வதுடன் பயண நேரமும் வெகுவாக அதிகரிக்கிறது.
வான்வெளியை மூடிய பாகிஸ்தான்..
அமெரிக்கா, பிரிட்டன், பிற ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் செல்ல வேண்டியவர்கள், அங்கிருந்து வர வேண்டியவர்கள் நிலை சிக்கல் மிகுந்ததாக மாறியுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானங்களுக்கு பெரும் பகுதி வருவாய், மேற்கு நோக்கிய பயணங்களால் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு பாலாகோட் தாக்குதலின்போது
இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை 5 மாதங்களுக்கு மூடி வைத்திருந்தது. இதன் காரணமாக மாற்றுப்பாதையில் விமானங்களை இயக்கியதால், இந்திய விமான நிறுவனங்களுக்கு 550 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.