ஓட்டுநர் முருகன் மரணம்
ஓட்டுநர் முருகன் மரணம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தென்காசி ஓட்டுநர் முருகன் மரணம் | “காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - நீதிபதி

PT WEB

செய்தியாளர் - மருதுபாண்டி, மணிகண்ட பிரபு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் முருகன் (37). இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 8 அன்று, அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வேனில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சங்கரன்கோவில் நகரப் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சாலை விபத்து

இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஓட்டுநர் முருகன் மது அருந்தி விட்டு விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் முருகனைத் தாக்கி உள்ளனர். அதில் ஓட்டுநர் முருகன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு

இதுபற்றி தகவல் கிடைத்ததும், ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் அன்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு நலன் கருதி முருகனின் உடலானது நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, மூன்று காவலர்கள் மீது பெயர் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்த முருகன்

இந்நிலையில் காவல்துறையினர் ஓட்டுநரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வைரலானது. இதையடுத்து ‘அந்த மூன்று காவலர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இவற்றை வலியுறுத்தி தொடர்ந்து ஆறாவது நாளாக அவருடைய குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் சமூக அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சங்கரன்கோவில் பகுதியில் குவிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“கோரிக்கை மீது நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்” என காவல்துறை உறுதி அளித்தது. தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றாலும், தங்களுடைய கிராமத்தில் பந்தல் அமைத்து 15வது நாளாக சிலர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

உடற்கூறாய்வு அறிக்கை

இந்த நிலையில் உயிரிழந்த முருகனின் உடற்கூறாய்வு அறிக்கை இன்று காலை வெளியானது. அதில் முருகனின் உடலில் ஒன்பது இடங்களில் காயம் உள்ளதாகவும், தாக்கப்பட்டதாலேயே முருகன் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் முருகனின் உடற்கூறாய்வு அறிக்கை

பணியிடை நீக்கம்

மருத்துவ அறிக்கை வெளியானதை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட மூன்று காவலர்களை தென்காசி மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதுள்ளார்.

மற்றொருபக்கம், முருகனின் உடல் நீண்ட நாட்களாக குடும்பத்தினரால் வாங்கப்படாமல் உள்ளது. நெல்லை அரசு மருத்துவமனை பிணவறையிலேயே முருகன் உடல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கமானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது முதல்கட்ட விசாரணையை போலீசார் துவங்கியுள்ளனர்.

தொடர்ந்து வந்த இந்தப் பிரச்னைக்கு தீர்வு கோரியும், ‘உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது மட்டும் இல்லாமல் மூன்று குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும்’ என்று கோரியும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், “வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி சுவாமிநாதன், “ஏன் காவல்துறையினர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்? கோபம் வந்தால் தாக்குவார்களா?” என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.

தொர்ந்து இந்த வழக்கின் வழக்குப்பதிவு விவரங்கள் மற்றும் உடற்கூராய்வு அறிக்கை, மாஜிஸ்திரேட் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி 2.15க்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி விசாரணை நடைபெறும் நிலையில், சிபிசிஐடி அறிக்கையின் அடிப்படையில் காவலர்கள் மீது தேவையான சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். தற்போது உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள். எனவே உடலை பெற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவலர்கள் கடுமையாக தாக்கியதாலேயே முருகன் உயிரிழந்தார். காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம்” என வாதிடப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை

இதனையடுத்து காவல்துறை தரப்பில் காட்டப்பட்ட சில வீடியோ காட்சிகளை பார்த்த நீதிபதி, “முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சிபிசிஐடி விசாரணை அறிக்கையை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.