தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினர் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரையில் அவரது ரசிகர்களும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் விஜயகாந்த் முதன் முதலாக சினிமாவிற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள "ராசி டிஜிட்டல் ஸ்டூடியோவில்" முதல் முறையாக சினிமா வாய்ப்புக்காக விதவிதமான மாடல்களில் பல்வேறு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
மதுரையின் பிரபல புகைப்பட கலைஞர் ஆசைத்தம்பி என்பவரை 1976 ஆண்டில் அணுகி சினிமா பட வாய்ப்புக்காக புகைப்படங்கள் எடுத்துத் தர வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காகப் புகைப்பட கலைஞர் ஆசைத்தம்பி இரவு பகல் பார்க்காமல் நடிகர் விஜயகாந்தை பல்வேறு மாடல்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த படங்களை நடிகர் விஜயகாந்த் பட வாய்ப்புக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்தார்.
இதுகுறித்து ஆசைத்தம்பி பேசியபோது, "விஜயகாந்த் நடிப்பின் மீது மிக அதிக ஆர்வம் கொண்டவர். ரஜினிக்கு போட்டியாக ஒருவரை உருவாக்க வேண்டும் என்பதற்காகப் புகைப்படங்களை எடுத்தேன். சினிமாவில் வாய்ப்பு தேட புகைப்படங்கள் எடுத்துத் தருமாறு விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். இரவு நேரத்தில் மட்டுமே விஜயகாந்த்காக புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
ஒரு புகைப்படம் எடுக்க 2 மணி நேரம் ஆகும். இரவு 11 மணி முதல் அதிகாலை வரை புகைப்படங்கள் எடுப்போம். டீயை குடித்துக்கொண்டே இரவு முழுவதும் கண் விழித்து புகைப்படங்கள் எடுப்போம். புகைப்படங்கள் எடுக்க விஜயகாந்த் மிகுந்த ஒத்துழைப்பு தருவார்.
பல்வேறு தோற்றங்களில் விஜயகாந்த் வைத்து 36 புகைப்படங்கள் எடுத்தோம். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் விஜயகாந்திற்கு சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது" என்றார்.