செய்தியாளர்: ரமேஷ்
மதுரை மாவட்டம் மேலூர் ஸ்டார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் சாய்லெட்சுமி (60) தம்பதியர். இன்று அதிகாலை மாணிக்கம் நடை பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது மனைவி சாய்லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், சாய் லட்சுமியை தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து சாய் லெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.