நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் Twitter
தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் பல தற்குறிகள்..” - அர்த்தங்களை சொல்லி விளக்கி பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

”புத்தகங்கள் படிக்காமல் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டுபவர்கள் தற்குறிகள்” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Prakash J

தற்குறிகள் என்றால் யார் அதற்கு என்ன அர்த்தம் தற்போது அதற்கு என்ன அர்த்தம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விரிவாக பேசியிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கலந்துகொண்டு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல நினைத்தேன். தற்குறிகள் எனும் ஒரு வார்த்தை உள்ளது. நான் எதையுமே மறைமுகமாக அர்த்தம் பண்ணவில்லை. தற்குறிகள் என ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறது என்றுதான் சொன்னேன்.

ஆனால், இன்றைக்கு தற்குறிகள்.. தற்குறிகள்.. தற்குறிகள் என்று பல பேர் பேசுகிறார்கள். தற்குறிகளுக்கு என்ன அர்த்தம்? படிக்காதவர். அவருடைய தற்குறி என்ன?

judge anand venkatesh

தன்னைத்தானே குறித்துக் கொள்ள கைநாட்டு வைப்பார். அவர் பெயர்தான் தற்குறி. ஆனால், அந்தக் காலம் தாண்டிப்போய் இன்று எல்லோருமே படித்திருக்கிறார்கள். கையெழுத்துப் போடுமளவுக்கு இருக்கிறார்கள். ஆனாலும் நாம் இன்றைக்கும் தற்குறி என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அந்த தற்குறி என்கிற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அந்த அர்த்தம் என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் படிக்காமல் தங்களுடைய வாழ்க்கையை ஓட்டுபவர்கள் தற்குறிகள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடைய வாழ்க்கையில், படிக்கின்ற பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இது வாழ்க்கைக்கும் முக்கியம். மாணவர்கள் புத்தங்கள் படிக்க வேண்டும். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட அறிவு நமக்கு தேவை இல்லை. பள்ளிப்பருவத்தில் அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும். நீங்கள் தற்குறிகளாக சுத்தாதீர்கள். புத்தகத்தைப் படிக்காமல் இன்றைக்கு தமிழ்நாட்டில் பல தற்குறிகள் சுத்துகிறார்கள். புத்தகத்தைப் படிக்காமல் தமிழகத்தில் பல தற்குறிகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்

மேலும், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் காணொளியையும், யாரோ ஒருவர் எழுதிய பார்த்து இன்று மணிக்கனகாக பேசி வருகின்றனர். மேலும் அதில் வரும் இரண்டு வரிகளை வைத்துக் கொண்டு பேசி வருகின்றனர். படிப்பு என்பது உழைத்தால்தான் வரும். சும்மா வராது. ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இன்று நம்மில் பலருக்கும் படிக்கும் பழக்கம் போய் விட்டது. அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

சமீபகாலமாக தமிழக அரசியல் களத்தைச் சுற்றி ‘தற்குறி’ என் வார்த்தை சுற்றிவருவது குறிப்பிடத்தக்கது.