சென்னையில் மெட்ரோ சேவை பொதுமக்களுக்கு நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக சென்னையின் பிற பகுதிகளிலும் மெட்ரோ பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழைமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் ராஜகோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ’ஆலயம் காப்போம்’ கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும், 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே முன்அனுமதி பெற்று 200 கோடி ரூபாய் செலவில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த உத்தரவாதத்தை செயல்படுத்தும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அந்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார். மேலும், மெட்ரோ ரயில் நிலையம் கட்டுவதற்காக இரண்டு இந்து கோயில்களுக்கு அருகிலுள்ள நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வழக்கு விசாரணையின் போது, கோயில் நிலம் கையகப்படுத்தப்பட்டாலும், மெட்ரோ நிலையத்தின் வளர்ச்சிக்கு தெய்வீக ஆசீர்வாதங்கள் துணைபுரியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்தது. மெட்ரோ திட்டம் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் என்றும், இந்த பொது நோக்கத்திற்கு கடவுள் கருணை காட்டுவார் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நம்பிக்கை தெரிவித்தார். இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்கள் பெரும் நன்மைக்காக சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.