சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், நீதிமன்றத்தின் அனுமதியோடு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் அனுமதியுடன் விசாரணை நடத்தலாம் என அமலாக்கத்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பிலான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்துவரும் நிலையில், கடந்த 28 ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி வாயிலாக ஆஜரானார். அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி, தன் நீதிமன்றம் காவலை மேலும் நீட்டிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, நிலுவையில் இருந்துவந்த செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் (அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக குற்றம்சாட்டி, அவரை விடுவிக்கக் வேண்டுமென அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தீர்ப்பளித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது) மனைவி மேகலா தரப்பின் வாதங்கள் வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. முன்னதாக இவ்வழக்கில் மூன்றாவது நீதிபதி முன் அமலாக்கத்துறையின் வாதங்கள் ஜூலை 12-ல் நடந்தது. பின் மேகலா தரப்பு வாதங்கள் ஜூலை 14-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
மூன்று நீதிபதிகள் அமர்வு ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கையில் 3 நீதிபதிகளும் தீர்ப்பளித்த பின், பெரும்பான்மை தீர்ப்பு எதுவோ அதுவே இறுதி முடிவாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதன்படி பார்த்தால், நீதிபதி பரத சக்கரவர்த்தியுடன் ஒத்துப் போவதாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையின்போது மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான். விசாரணையை எதிர்கொண்டு தான் நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ‘செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லையா?’ என்ற இன்றைய முதல் கேள்வியிலேயே, தான் பரத சக்கரவர்த்தியுடன் ஒத்துப் போவதாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு உரிமையுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது.
அடுத்தபடியாக ‘ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா’ என்ற கேள்விக்கு பதிலளித்த நீதிபதி கார்த்திகேயன், “செந்தில் பாலாஜி கைதில் முறையான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கு தனக்கு உள்ளதென அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். அப்படியிருக்க, கைதுக்கான காரணம் தெரியாது என செந்தில்பாலாஜி தரப்பு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உகந்தது அல்ல” என தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக ‘செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா கூடாதா’ என்ற கேள்வியில், “செந்தில்பாலாஜி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சூழலில் அவரிடம் விசாரணை செய்யும் சூழல் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் விசாரணை செய்ய வேண்டிய தேவை இருப்பதால், செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவலாக எடுத்துக் கொள்ள முடியாது.
மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம். இதில் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் உத்தரவுடன் ஒத்துப் போகிறேன்” என தெரிவித்துள்ளார்.