சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக குற்றம்சாட்டி, அவரை விடுவிக்கக் வேண்டுமென அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தீர்ப்பளித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர்.
அதன்படி நீதிபதி நிஷா பானு தன் தீர்ப்பில் ‘செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் உள்ளார். அவரை விடுவிக்க வேண்டும்’ எனவும், நீதிபதி பரத சக்கரவர்த்தி தன் தீர்ப்பில் ‘நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை’ எனவும் கூறினர். இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துக்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத்துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷாபானு கையாளவில்லை. இளைய நீதிபதியான பரத சக்கரவர்த்தி கையாண்டுள்ளதால் இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என கூறமுடியாது” என குறிப்பிட்டார்.
மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து,
* செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா
* நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா
* செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா கூடாதா
என மூன்று கேள்விகளை தீர்மானித்து, விசாரணையை ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார் 3-வது நீதிபதி. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று தொடங்க உள்ளது.