நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தகுதி நீக்க வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam, ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: வி.எம்.சுப்பையா

திருநெல்வேலி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்திலிருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு வழக்கில் தொடர்புடைய இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

Cash seized

இதுதொடர்பான மனு மீது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக, காங்கிரஸின் அந்த இரு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இருவருக்கு எதிராக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பாஜக வேட்பாளரின் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும், திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புலன் விசாரணை நடந்து வருகிறது. பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras High court

விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், பணம் பறிமுதல் தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.