‘பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது’ - FIR-ல் தகவல்!

ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்புதிய தலைமுறை

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் கடந்த வாரம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட மூன்று நபர்களின் பைகளில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் என்பது தெரிய வர, சென்னையில் அவருக்கு தொடர்புடைய ஓட்டலில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

கைப்பற்றப்பட்ட பணம், பசுமைவழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் கைமாறியது தெரியவந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த விடுதியின் உரிமையாளர் பாஜகவின் மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தன் எனக்கூறப்படும் நிலையில், அவருக்கு ஏற்கெனவே காவல்துறை சம்மன் அனுப்பியது.

தற்போது 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவெடுத்துள்ள தாம்பரம் காவல்துறை, அவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது.

மேலும் இவ்விவகாரத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி, நயினார் நாகேந்திரனின் பணம். அவருக்கு சொந்தமான பணம்’ என முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை வாக்காளர்களுக்கு கொடுக்க, இப்பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக வாக்குமூலம் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் FIR-ல் உள்ளது. முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com