ttf vasan
ttf vasan pt web
தமிழ்நாடு

“TTF வாசன் பைக்கை எரித்துவிடலாம்; யூ-ட்யூபை மூடிவிடலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Angeshwar G

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூட்யூபர் டி.டி.எஃப்.வாசன், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.

ttf vasan

சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி டிடிஎஃப் வாசன் விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிந்திருந்தனர். இந்த வழக்கில் யூட்யூபர் டி.டி.எஃப்.வாசன், செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.எஃப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எஃப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சாலையில் மிதமான வேகத்தில் வந்துகொண்டிருந்தபோது, கால்நடைகள் சாலையை கடந்தன. இதனால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியது. பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” எனக் கூறப்பட்டிருந்தது.

TTF Vasan arrest

மேலும், “விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஆகவே ஜாமீன் வழங்க வேண்டும்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தான் அப்பாவி என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார் வாசன்.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் சார்பில், “20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர்தப்பியிருக்கிறார். இவரது யூ-ட்யூப் சேனலை பின்தொடரும் 45 லட்சம் பேர் சிறார்கள். அவர்கள் இவரைப்பார்த்து அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதும் நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

TTF Vasan

இதையடுத்து, மருத்துவ காரணங்களைக் கூறி ஜாமீன் கேட்ட டிடிஎஃப் வாசனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கார்த்திகேயன் அவருக்கு மருத்துவ சிகிச்சையை சிறையிலேயே வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்ட மனுதாரரின் வழக்கு மற்ற இளைஞர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். எனவே அவர் நீதிமன்ற காவலில் நீட்டிக்க வேண்டும். அவரது யூட்யூப் பக்கத்தை மூடிவிட்டு பைக்கை எரித்துவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடவும்” என தெரிவித்துள்ளார் நீதிபதி. மேலும் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.