கரூரில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 50க்கும் மேற்ப்பட்டோர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிடையாக கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுங்கட்சி தவிர, பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு, காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை எனவும் இந்த அரசாங்கம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. நடுநிலைமையுடன் நடந்து கொள்வது அவசியம் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசை விமர்சித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
முந்தைய கூட்டங்களை ஆய்வு செய்த பிறகுதான், கூடுதல் கட்டுப்பாடுகளை தவெகவிற்கு காவல் துறை விதித்ததாகவும், உடனே தவெகவினர் நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காவல் துறை நிபந்தனைகள் எதுவும் தவெக பரப்புரையில் கடைபிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தவெகவினர் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைத்துவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்தால் அரசாங்கம் இடையூறு செய்கிறது என தமிழகத்திற்கு தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் பழனிசாமி எனவும் விமர்சித்துள்ளார். காவல் துறை விதித்த நிபந்தனைகளை கடைபிடிக்காததாலேயே, கரூர் சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அனுமதி தராவிட்டால் அதில் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் நிபந்தனைகளை மீறுவது என, மோசமான அரசியலுக்கு தவெக மாறிவருவதாகவும் சாடியுள்ளார். கூட்டத்தை காட்ட முட்டு சந்துதான் தேவை என, மக்களை அலைக்கழிப்பதே பழனிசாமி போன்றோரின் கேவலமான அரசியலாக இருப்பதாக கூறியுள்ள மா.சுப்பிரமணியன், மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள், பிணங்களின் மீது அல்ல என கூறியுள்ளார்.