செய்தியாளர்கள் I.M.ராஜா, காதர்உசேன், முருகேசன்
காதலிக்கும் பெண்ணை இத்தனை குரூரமாக காயப்படுத்த முடியுமா? கொல்ல முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த சம்பவம். மதன்குமாரும், ரமணியின் தம்பியும் நண்பர்கள். இதனால் ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாற, ரமணியும் மதன்குமாரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்னர் மதன்குமாரின் பெற்றோர், ரமணி வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட நிலையில், ரமணியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ரமணி, மதன்குமாருடனான காதலை கைவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ரமணி வேலை செய்யும் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மதன், ஓய்வறையில் இருந்த ரமணியை அழைத்து பேசியுள்ளார். அப்போது திடீரென ரமணியின் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர், தகவல் அறிந்து விரைந்துசென்றதால் மதன்குமார் பிடிபட்டார்.
பள்ளிக்குள் நடந்த இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
இந்நிலையில்தான், ஆசிரியர் கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமாக ஈடுபடுபவர்களுக்காக யாரும் தயவு செய்து வாதாட வராதீர்கள். இம்மாதிரி உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டனைக்கு உரியவர்கள். அவருக்கு நீதிமன்றம் கொடுக்கின்ற தண்டனை என்பது, ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும், மனிதத்தன்மையை காக்கக்கூடிய அளவிலான தண்டனையாக இருந்திட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
இம்மாதிரி சம்பவம் நடந்துவிட்ட பிறகு, பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு ஒரு பய உணர்வு வரும். குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரும்போது பய உணர்வுடன் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்க சொல்லியுள்ளேன். திங்களன்று ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்க சொல்லியுள்ளேன்” என தெரிவித்தார்.
ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், “ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டது மிருகத்தனமானது. விரைவில் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியை ரமணியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.