அரசு பேருந்து pt
தமிழ்நாடு

குளித்தலை| ஓடும் பேருந்தில் பாட்டியின் தாலியைப் பறித்த பெண்.. மடக்கிப்பிடித்த மக்கள்!

கரூரில் பேருந்தில் தாலியை அறுத்துவிட்டு இறங்க முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டார்; பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

PT WEB

குளித்தலை அருகே ஓடும் பேருந்தில் 60 வயது பாட்டியின் தாலியைப் பறித்த பெண், பயணிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா என அடையாளம் காணப்பட்ட அவர், வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பக்காப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியாயி (60), தனது உறவினர்களுடன் மாயனூர் பகுதியில் வயல் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் மணப்பாறை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் ஏறிய பெண் ஒருவர், மாரியாயின் அருகிலேயே நின்றுள்ளார்.

பேருந்து கோட்டமேடு அருகே சென்றபோது, தனது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலிக்கயிறு காணாமல் போனதைக் கண்டு மாரியாயி கூச்சலிட்டுள்ளார். இதற்கிடையே அருகில் நின்றிருந்த பெண், திடீரென யூனியன் அலுவலகத்தில் இறங்க வேண்டும் எனக் கூறியதால் சக பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பெண்ணை பிடித்து சோதனையிட்டபோது, அவரது காலடியில் தாலிக்கயிறு கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தப்பிச் செல்ல முயன்ற அந்தப் பெண்ணை பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார், அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, சமுத்திரம் அடுத்த மறவனூர் பகுதியைச் சேர்ந்த துர்கா (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாரியாயி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், துர்காவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.