மகளிர் உரிமைத் தொகை 5,000 ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மாநில அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வரவிருக்கிறது. இத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், மகளிர் உரிமைத் திட்டத்தை பாஜக கூட்டணி கட்சிகள் நிறுத்தி வைக்க முயற்சி மேற்கொள்ளக் கூடும் என்ற காரணத்தைக் கூறி எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் மற்றும் கோடைகால சிறப்புத் தொகையாக 2,000 ரூபாய் சேர்த்து 5,000ஆக மகளிர் உரிமைத் தொகை பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்குகளில் கடந்த, பிப்ரவரி 13ஆம் தேதி வரவு வைத்தது தமிழக அரசு.
இதை, தேர்தலை முன்னிட்டு வாக்கைப் பறிக்கும் சூழ்ச்சி என தமிழக தேர்தலை சந்திக்கும் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களின் நிதியை கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி இன்னும் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் இருந்து வருகிறது. ஆனாலும் ஏற்கனவே இருந்த அதிமுக கூட்டணிக்கே புதிய தமிழகம் கட்சி செல்ல சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் தான் இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசால் ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரூ.5,000 வழங்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது எனவும், ஏற்கனவே, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட SCA மற்றும் SCP திட்டங்களிலிருந்து நிதி எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.6,550 கோடி அளவிலான நிதி பட்டியலின மக்களுக்கான பிரத்யேக நிதியிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய இந்த பிரத்யேக நிதியை மாநில அரசின் கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், SCP திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை தமிழக அரசு முழுமையாக சிதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ரூ.5,000 வழங்கப்பட்டிருப்பதால் இது ஓட்டிற்கான கையூட்டாகவே பார்க்கப்படுகிறது எனவும் விமர்சித்துள்ளார்.
அதேசமயம் கூட்டணி குறித்துப் பேசிய அவர், அடுத்த ஒரு வாரத்திற்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.