மோகன் பட்டாச்சாரியார்
மோகன் பட்டாச்சாரியார்  pt web
தமிழ்நாடு

“அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை” - ஆளுநரின் பதிவிற்கு பட்டாச்சாரியார் மறுப்பு

Angeshwar G

அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இன்று நடக்கிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தியில் அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தங்களது மாநிலங்களில், அங்கிருக்கும் மக்களுடன் நேரலையில் அயோத்தி ராமர் பிரதிஷ்டை நிகழ்வை கண்டுகளித்து கொண்டாட வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியிருந்ததாக தகவல் வெளியானது. தமிழகத்தில் அவ்வாறே ஏற்பாடுகள் நடந்த சூழலில் தமிழக பாஜக தலைவர்கள் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தவண்ணம் இருந்தனர். தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைக்கும், அன்னதானம் நிகழ்விற்கும் தமிழக அரசு அனுமதி மறுப்பதாக தெரிவித்திருந்தனர். இதற்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழக அரசை குறிப்பிடாமல் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். இதனை ஒட்டி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்தக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

#BREAKING | பூசாரிகள், கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு: ஆர்.என்.ரவி

பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து கோவில் ஊழியர் மோகன் பட்டாச்சாரியாரிடம் புதிய தலைமுறை நடத்திய பிரத்யேக நேர்காணலில், “கோவிலில் அடக்குமுறை ஏதும் நடைபெறவில்லை. ஆளுநருக்கான பாதுகாப்பை பின்பற்றி அவருக்கு முறையான வரவேற்பை அளித்தோம்” என தெரிவித்துள்ளார்.

மாம்பலம் கோவிலில் நடந்ததென்ன?

“இன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக காலை சுமார் 8 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அவருக்கு சிறப்பான முறையில் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவிலைப் பற்றிய ஸ்தல வரலாறு, கோவிலைப் பற்றிய சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. சிறப்புப் பூஜையும் நடைபெற்றது. அதன் தீபாராதணையில் கலந்துகொண்டார்.

தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இருந்து ஆளுநர் வரும் சமயத்தில் எங்களை பேச அழைத்தனர். அவர்களிடம், இல்லை எங்களால் முடியாது. ஆளுநர் வரும் நேரம் ஆகிவிட்டது. அவர் வந்து சென்ற பின் இதுகுறித்து பேசுகிறோம் என கூறியிருந்தோம். இதைத்தான் ஆளுநர் அப்படி எடுத்துக்கொண்டதாக நாங்கள் நினைக்கின்றோம். முகச்சுழிப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

ஆளுநரின் பாதுகாவலர்கள் முன்னேற்பாடுகளை பின்பற்றினார்கள். அதன்படி நாங்களும் நடந்துகொண்டு அவர்களை வரவேற்றோம். வேறு ஏதும் இங்கு நடக்கவில்லை” என தெரிவித்தார்.