மதுபான விளம்பரம் pt desk
தமிழ்நாடு

கொடைக்கானல் | போலீசார் வைத்துள்ள சாலை தடுப்புகளில் மதுபான விளம்பரம் - பொதுமக்கள் அதிர்ச்சி

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஏரி சுற்றுச் சாலை பகுதியில் மதுபான விளம்பரத்துடன் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: செல்வ. மகேஷ் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியைச் சுற்றி உள்ள, நடைபாதையில், பயணிகள் காலாற நடந்தபடி இயற்கையை ரசிப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் வழக்கம். பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் என, பல்வேறு தரப்பினர் ஏரியைச் சுற்றி நடை பயிற்சி செய்வது, வாடிக்கையான ஒன்று.

உடலுக்கும் மனதுக்கும் வலு சேர்க்கும் வகையில், நடைபயிற்சி செய்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும் விதமாக, ஒருவழிப் பாதைக்காக காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பான்களில், மது போதையை ஊக்குவிக்கும், விளம்பரங்கள் பொறிக்கப்பட்டு அனைவரின் கண்ணில் படும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புகளில் தனியார், விடுதி ஒன்று, இந்த விளம்பரத்தை வைத்துள்ளது, இது கண்டிக்கத்தக்கது எனக் கூறும் உள்ளூர் வாசிகள், இது போன்ற விளம்பரங்களை காவல்துறையினர் எப்படி அனுமதித்தனர் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இது குறித்து போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் முத்து ராமலிங்கத்திடம் பேசிய பொழுது, உடனடியாக, இந்த விளம்பரம் அகற்றப்படும் என உறுதி அளித்தார்.