சிவகங்கை | போலீசாரை கண்டதும் தப்பியோடிய தம்பதி – விசாரணையில் வெளியான திருட்டு சம்பவம்
செய்தியாளர்: நைனா முகம்மது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியில் வசித்து வருபவர்கள் குணசேகரன் - ஜெயலெட்சுமி தம்பவர். கடந்த மாதம் 27ம் தேதி விவசாய வேலைக்காக சென்ற இவர்கள், வீட்டை பூட்டி மீட்டர் பெட்டியின் உள்ளே சாவியை வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டை திறந்து பட்டப் பகலில் 120 கிராம் தங்கம், ரூ.40 ஆயிரம் பணம், இரண்டு வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி ஆஸிஷ் ராவத் உத்தரவின் பேரில், சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று சிவகங்கை-மதுரை மாவட்ட எல்கையான கோட்டை வேங்கைபட்டி நான்குவழிச் சாலை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது மதுரையில் இருந்து சிங்கம்புணரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோடினர்.
இதனால் உஷாரான போலீசார், சந்தேகமடைந்து அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் சிங்கம்புணரி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு - லதா என்பதும், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 80 கிராம் தங்கம் சொகுசு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.