காவிரி நதியின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு ஆணவமாகவும், பலவீனமான கூட்டணி ஆட்சி என்ற எண்ணத்தில் வந்ததுமாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டினார். காவிரி உரிமையை நசுக்கும் இந்த நிலைப்பாட்டை தமிழக முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
மேலும் அவர், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை. இது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமே அணை கட்ட பச்சைக்கொடியை காட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான அலுவலகத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு, இத்திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெறும். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் அரசு உறுதியாகவுள்ளது” என தெரிவித்தார்.
இவருடைய இந்த பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, டிடிவி தினகரன் உள்ளிட்ட தரப்பு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிகே சிவக்குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் விஜய் தற்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் நேரு, “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் டி.கே. சிவக்குமார்.
காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம். காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.