திமுக, அதிமுக போட்ட ஸ்கெட்ச்.. மே-4 ல் நடந்தது என்ன? - உடைத்துப் பேசிய மாணிக்கம் தாகூர்!
சட்டப்பேரவைத் தேர்தலில் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று முதன்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்திடம் தோல்வியை சந்தித்திருக்கிறது திமுக. அக்கட்சிக்கு மேலும், அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் அமைந்தது, கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் தோல்வி. அதேசமயம், தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றிப் பெற்றிருந்தாலும், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. முதலில், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகவும் கூறி வந்த விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது தவெக அமைச்சரவையில் பங்கேற்று இருக்கின்றன. இது திமுகவுக்கு மேலும், பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் தான், சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”20 வருடங்களுக்கும் மேலாக நம் முதுகில் சவாரி செய்த காங்கிரஸ், இன்று நம் முதுகில் குத்திவிட்டு சென்றிருக்கிது.. இதை யாரும் மறந்துவிடாதீர்கள். பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும் அமித்ஷாவும் தான் காரணமென நினைத்திருந்தேன்; ஆனால், அதற்கு முதன்மையான காரணம் காங்கிரஸ். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற திமுகவினர்தான் காரணம்; குறைந்தபட்ச நன்றியோ நாகரீகமோ இல்லாத காங்கிரஸை எந்த காலத்திலும் நாம் நம்பக்கூடாது” என கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். தொடர்ந்து, காங்கிரஸுக்கு எதிராக தீர்மானமும் இயற்றப்பட்டிருந்தது.
இந்தசூழலில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ள எம்.பி. மாணிக்கம் தாகூர் உதயநிதியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார். அதில், “மே-4 ஆம் தேதி மாலை 3 மணிக்கு, அதிமுகவும் திமுகவும் சேர வேண்டும் என டெல்லியில் இருந்து இருகட்சிகளுக்கும் ஆணை வந்தது. அவர்களும் இது குறித்து பேச ஆரம்பித்தார்கள். அதற்கு கனெக்டிங் கால் போட்டது பாஜக. இந்த தகவல் வந்ததையடுத்து, நாங்கள் அடுத்த நாள்(மே-5) எங்கள் கட்சியினருடன் பேச ஆரம்பித்தோம். மே 6-ம் தேதி தவெகவுடன் கூட்டணியில் இணைந்தோம்.
உதயநிதியைப் பொறுத்தவரை விஜய் முதல்வராகக் கூடாது என அனைத்து முயற்சிகளையும் செய்து தோற்றிருக்கிறார். பழனிசாமி முதலமைச்சராக திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்கும் என்பதுதான் டீல்; காரணம் விஜய் முதலமைச்சராகக் கூடாது. இதற்கு ஆளுநரும் மறைமுக உதவி இருப்பார்.ஏனெனில் கனெக்டிங் கால் போட்டது டெல்லி. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து உட்கார மாட்டாம் என தெரிவித்திருக்கிறார்கள்; பின் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவிற்கு ஆதரவு என்பார்கள். இவை அனைத்திற்கும் முழு முதற்காரணம் உதயநிதி. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பாஜக வரக்கூடாது.
திமுக பாஜகவுடன் பேசுகிறது எனத் தெரிந்தவுடன் தான், நாங்கள் அவர்களிடம் செல்லாமல் தவெக கூட்டணி சென்றிருக்கிறோம். நேற்று உதயநிதி பேசும்போது வன்மம் வெளிபட்டது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

