CM Vijay PTI
தமிழ்நாடு

எதிர்ப்பு எழுந்தால் வாபஸ்.. TVK அரசு திரும்பப் பெற்ற முக்கிய அறிவிப்புகள்.. முழு லிஸ்ட் உள்ளே!

தவெக அரசு சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதும், அதற்கு எதிர்ப்பு எழுந்ததும் திரும்பப்பெற்று வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

Praveen Joshva L

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, விஜயின் பிரத்யேக ஜோதிடரான ரத்தன் பண்​டிட் வெற்றிவேல் முதல்​வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, தவெக அரசின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக தவெக அரசு அந்த உத்தரவை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து தாம்பரம், ஆவடி, மதுரை, கோவை, திருச்சி உள்பட 12 மாநகராட்சிகளில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்குவது தொடர்பாக, தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இதற்கு இடதுசாரிகள், தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த டெண்டரும் திரும்பப் பெறப்பட்டது.

இதனிடையே இடதுசாரி கட்சியிலுள்ள நபர்களின் பெயர்களைச் சேகரித்துக் கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த அய்யாசாமி. உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இதற்கு இடதுசாரிகள், பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட தமிழ்நாடு அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றதோடு, குறிப்பிட்ட வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.

cm vijay

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு கரப்பான் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதற்கும் மாணவர் அமைப்புகள், இடதுசாரிகள், கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரண்டே நாளில் இந்த அறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது.

இதேபோல, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகள், அடிப்படைத் தேவைகளை தலைமை ஆசிரியர்களின் சொந்த செலவில் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அதுவும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது. மேலும், சென்னையில் சொத்துவரி மாற்றியமைத்த விவகாரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா மூன்றாம் கட்ட விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அறிவிக்கை ஆகியவையும் எதிர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசால் திரும்பபெறப்பட்டது.

cm vijay

இந்தச் சூழலில், நேற்று சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தவெக அரசின் கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அந்த அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.