கீழடி அகழாய்வு அறிக்கை குறித்த மதிப்பீட்டு அறிக்கையை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தயாரித்துள்ளது. 114 பக்கங்கள் கொண்ட இந்த மதிப்பீட்டு அறிக்கை, கீழடி அகழாய்வு குழு அறிக்கையை தயாரித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்த 982 பக்க அறிக்கையில், கீழடி ஒரு 'தனித்துவ கலாச்சாரம்' கொண்ட தளம் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த வாதம் கீழடியில் உள்ள மண்ணடுக்கு மற்றும் ஆதாரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்று இந்திய தொல்லியல் துறை குழு கூறியுள்ளது. மேலும், கீழடி அறிக்கையில் தரவுகள் முறையாகப் பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்றும், சில வரலாற்றுத் தரவுகள் போதிய ஆதாரமின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் கி.மு 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற கருத்தை இந்திய தொல்லியல் துறை ஏற்கவில்லை. அது கிமு 300-க்கு முந்தையதாக மட்டுமே இருக்க முடியும் என்று வாதிடுகிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்பி-க்கள் கீழடி அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதம் செய்வது குறித்து கேள்வி எழுப்பிய மூன்று நாட்களில் இந்த 114 பக்க விமர்சன அறிக்கை வெளியாகியுள்ளது. "அறிவியல்பூர்வமான ஆவணத்தைப் போதிய தரவுகள் இன்றி அரசியலாக்குகிறார்கள்" என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.