2025 Recap | பேரிடரைச் சந்தித்த 10 உலக நாடுகள்!
2025 ஆம் ஆண்டு அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் உலக நிகழ்வுகள் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் பாதித்த முக்கிய தருணங்களை பதிவு செய்த ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
2026ஐ வரவேற்க இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு புத்தாண்டையும் நாம் இனிதாகத்தான் வரவேற்கிறோம். ஆனால், இயற்கையால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகம் அவற்றின் எதிர்பாராத சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகின்றன. நிலநடுக்கம், சுனாமி, பெருவெள்ளம், காட்டுத் தீ உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் எப்போது வரும் எனத் தெரியாது; ஆனால், வந்துவிட்டால் பேரழிவை நிகழ்த்தாமல் நகராது. அப்படியான இயற்கைச் சீற்றங்களை நடப்பாண்டும் மக்கள் சந்தித்தனர். அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ, இன்னும் சில நாடுகளில் வீசிய சூறாவளிப் புயல்கள், பெருவெள்ளம், நிலநடுக்கம் என நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களைச் சந்தித்த நாடுகள் குறித்தும் அவை எத்தகைய பாதிப்புகளைச் சந்தித்தன என்பது குறித்தும் இங்கே விரிவாகக் காண்போம்.
1. கலிபோர்னியாவில் காட்டுத் தீ
காட்டுக்கு ராஜாவாக சிங்கம் இருந்தாலும் தனக்கென ஒரு வலி வரும்போது அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதுபோல் உலகத்துக்கே மிகப்பெரிய வல்லரசாக அமெரிக்கா திகந்தாலும் தன் நாட்டுக்கு ஒரு பாதிப்பு என வரும்போது சற்று தடுமாறுவதென்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த வகையில், அமெரிக்கா நடப்பாண்டில் மிகப்பெரிய காட்டுத் தீயை எதிர்கொண்டது. அமெரிக்கா அவ்வப்போது காட்டுத் தீயை எதிர்கொள்ளும் என்றாலும், கடந்த ஜனவரி்யில் தெற்கு கலிபோர்னியாவில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட காட்டுத் தீ, மோசமான சேதத்தை விளைவித்தது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப் பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசிய கடுமையான காற்று ஆகியவை காட்டுத் தீ பற்ற காரணமாகின. இந்தக் காட்டுத் தீயில் சுமார், 3,000 ஏக்கர் பகுதிகள் அழிந்து நாசமாகின. 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால், சுமார் 1.76 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்தக் காட்டுத் தீ அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் அனைத்துத் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தன.
2. டெக்சாஸில் பெருவெள்ளம்
காட்டுத்தீ தொடர்பான நினைவலைகளையே அமெரிக்கா மக்கள் முழுமையாக மறந்திருக்காத நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்த நாடு இன்னொரு பேரழிவை எதிர்கொண்டது. அமெரிக்காவின் மத்திய பகுதியின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழை, அங்கிருந்த குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுத்தது.
கெர்கவுண்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் அங்கு பெய்ததே நிலைமை மோசமாக காரணமானது. குவாடலூப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 131 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
3. மியான்மரில் நிலநடுக்கம்
காட்டுத் தீயையும் பெருவெள்ளத்தையும் அமெரிக்கா கடந்தது என்றால், இன்னும் சில நாடுகள் கடுமையான நிலநடுக்கத்தையும் எதிர்கொண்டன. அதில் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரும் ஒன்று. 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்றாலும், கடந்த மார்ச் 28ஆம் தேதி நண்பகல் 12.50 மணியளவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பேசுபொருளாகின. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அப்போது, மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர், குலுங்கி வெளியே கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 3,500 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
4. சூடானில் நிலச்சரிவு
மியான்மர் கடுமையான நிலநடுக்கத்தைச் சந்தித்த நிலையில், சூடான் அதைவிடக் கொடுமையான நிலச்சரிவைச் சந்தித்தது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள, ’கறுப்பு மக்களின் நிலம்’ எனப் பொருள்படும் சூடான் நாடானது, ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்ளூர் அதிகாரப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில்தான் சூடானின் மேற்குப் பகுதியான மர்ரா மலையில் உள்ள டார்பரில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையால், அப்பகுதியில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தராசின் என்ற கிராமமே மண்ணில் புதைந்ததுடன், அங்கிருந்த 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர் குழுவான சூடான் விடுதலை இயக்க ராணுவம் தெரிவித்திருந்தது. சூடான் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் இது பெரும் பாதிப்பைச் சந்தித்தது கவனிக்கத்தக்கது.
5. பாகிஸ்தானில் பெருவெள்ளம்
நிலநடுக்கத்தால் மியான்மரும், நிலச்சரிவால் சூடானும் பாதிக்கப்பட்ட நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தான் அமெரிக்காவைப் போன்று பெருவெள்ளத்தைச் சந்தித்தது. பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாப் மற்றும் அங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்தம் 13 கோடி மக்கள்தொகை உள்ள இந்த பஞ்சாப் மாகாணத்தில் 3,100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இவை தவிர, 2,900 சிறு கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கியதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த வெள்ளப்பெருக்கால், சுமார் 24 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கால், சுமார் 40 லட்சம் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் அடைந்த நிலையில், இந்திய அரசு தொடர்ந்து மூன்று முறை பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
6. இந்தியாவிலும் பெருவெள்ளம்
பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இந்தியாவும், இதே வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டது வேதனையான விஷயம். ஆம், இந்தத் துயரம் வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்தது. கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொண்டன. அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால், பிரம்மபுத்திரா, பராக் உள்ளிட்ட 10 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அருகிலிருந்த அருணாச்சல் பிரதேசமும், மேகாலயாவும் பாதிப்பைச் சந்தித்தன. காரணம், அங்கேயும் தொடர் மழை பெய்தது. இந்த வெள்ளப் பெருக்கால் அசாமின் 15 மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். மூன்று மாநிலங்களும் உயிரிழப்புகளையும் சந்தித்தன. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். சாலைகளும், வீடுகளும் சேதமடைந்தன. இதே பாதிப்பை மணிப்பூர், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களும் சந்தித்தன.
7. இலங்கையைச் சூறையாடிய ‘டிட்வா’!
இருதுருவங்களாக விளங்கும் இந்தியாவும் பாகிஸ்தானும் பெருவெள்ளத்திற்கு இரையான நிலையில், இன்னொரு அண்டைநாடான இலங்கை, கடந்த நவம்பர் மாதம் உருவான ’டிட்வா’ புயலுக்கு இரையானது. கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடர் எனக் கூறப்படுகிறது. ஏமனால் அரபு மொழியில், ’தீவு’ எனப் பெயர் சூட்டப்பட்ட அந்தப் புயல், தீவு நாட்டையே காவு வாங்கியது. வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் இலங்கையை புரட்டிப் போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.
புயலின் கோரத்தாண்டவத்தால் மொத்தம் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்ர். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த புயலால், இலங்கையில் சுமார் 18 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. இந்தப் புயலால், இலங்கை முழுவதும் சுமார் 1,200 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
8. இந்தோனேஷியாவைச் சீர்குலைத்த ’சென்யார்’!
‘டிட்வா’ புயல் இலங்கையைச் சின்னாபின்னமாக்கியது என்றால், ‘சென்யார்’ புயல் இந்தோனேஷியாவையே சீர்குலைத்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா ஒரு தீவுக்கூட்ட நாடாக அறியப்படுகிறது. அதேநேரத்தில், இது கடல்கள், மலைகள், காடுகள் கொண்ட அழகான ஒரு நாடாகவும் காட்சியளிக்கிறது. இந்த நாடும் அடிக்கடி நிலநடுக்கங்களால் அழிவைச் சந்திக்கிறது. இந்நாடு, ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளதால், உலகின் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த பகுதியில்தான் நிகழ்கின்றன. இது நடப்பாண்டில், ஒரு மாதத்தில் மட்டும் 1,400 நிலநடுக்கங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்தோனேஷியாவின் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுப்பெற்று கடந்த நவம்பர் 26-ஆம் தேதி வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடந்தது. இதன்காரணமாக அங்கு கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் உள்ள 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டனர். தவிர, 'சென்யார்' புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்தது. மேலும், 218 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் வெள்ளப் பாதிப்புகளால் சேதமடைந்தன. சுமார் 3.11 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
9. தாய்லாந்தைத் தாக்கிய புயல்
இந்தோனேஷியாவை சீர்குலைத்த ‘சென்யார்’ புயல், இன்னொரு தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தையும் அது விட்டுவைக்கவில்லை. இதேபுயல், தாய்லாந்திலும் தனது கோரமுகத்தைக் காட்டியது. இந்தப் புயலின்போது தாய்லாந்து நாட்டில் பெய்த கனமழையால் அந்நாட்டின் தெற்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த 39 லட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
கனமழையால் 15 லட்சம் வீடுகளை நீர் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பல பகுதிகள் நீரில் மூழ்கின. கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 181 பேர் பலியாகினர். இவற்றில் சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர் என அரசு தெரிவித்தது. இந்தப் புயலால் மலேசியாவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10. சீனாவில் மண்சரிவு - வெள்ளம்
இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இதுவும், இயற்கைச் சூழல்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது இந்நாடும் பேரிடர்களுக்குப் பலியாகிறது. வடக்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளம், சீன தலைநகரை பல ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கிறது. இந்த வெள்ளத்தால், 80,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதில், குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர். அதிலும் பெய்ஜிங்கின் மலைப்பாங்கான மியுன் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
உலகில் எத்தகைய இடங்களில் மக்கள் வாழ்ந்தாலும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தே ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், அதுகுறித்து விழிப்புடன் இருப்பதும், அந்த ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

