கருப்பு முருகானந்தம் X
தமிழ்நாடு

பெண் அளித்தப் புகார் | பாஜக மாநில பொதுச்செயலாளர் நீக்கம்.. நயினார் நாகேந்திரன் நடவடிக்கை!!

தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக கருப்பு முருகானந்தம் மீது பெண் புகாரளித்ததையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு.

Premkumar S

தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்சியின் தேசிய தலைமை மற்றும் மாநில தலைவர்களிடம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து செப்டம்பர் 12 அன்று புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், கருப்பு முருகானந்தம் தமக்குத் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாகவும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கருப்பு முருகானந்தம்

மேலும், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதை செய்தது, விருப்பத்திற்கு மாறாகக் கருவைக் கலைக்க கட்டாயப்படுத்தியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பல தீவிரமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கட்சி மேலிடத்தை வலியுறுத்தினார்.

இந்நிலையில் தான், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தத்தை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M. முருகானந்தம், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர் கட்சியின் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அறிக்கை

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள கருப்பு முருகானந்தம், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலமாக எவ்வித முறையான விசாரணையும் நடத்தப்படாமல், என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ”இந்த விவகாரம் தொடர்பாக தேசியப் பொதுச் செயலாளர் சந்தோஷ் அவர்களிடமும், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அவர்களிடமும் நான் ஏற்கெனவே பேசியுள்ளேன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முழுமையாக விசாரித்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறான எவ்வித விசாரணையுமின்றி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இத்தகைய போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.