சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

கர்நாடகா | சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பசவன பாகேவாடி மணகுளியில் தேசிய நெடுஞ்சாலையில் கார், கண்டெய்னர், தனியார் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் பசவன பாகேவாடி தாலுகாவில் உள்ள மனகுலி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜயபுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்து சாலை தடுப்பை கடந்து, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் தனியார் பேருந்தில் பயணம் செய்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதையடுத்து இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனியார் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தெலுங்கானாவைச் சேர்ந்த பாஸ்கரின் குடும்பத்தினர் காரில் முருதேஷ்வர் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து மனகுலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.