செய்தியாளர்: சுமன்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மேற்கு கடற்கரை பகுதியான அரபிக்கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மேற்கு கடற்கரை அரபிக்கடல் பகுதிகளான மணக்குடி முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை இரண்டு மாதம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து மணக்குடி முதல் நீரோடி வரையிலான சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் ஆகிய துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.