இந்தியாவின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை நாளை மறுநாள் (நவம்பர் 30) நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மத்திய அரசு கொண்டுவரவிருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா போதிய பெருபான்மை கிடைக்காததால் தோல்வியடைந்திருந்த நிலையில், இம்முறை இம்மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
திமுகவின் இம்முடிவை இண்டியா கூட்டணியைச் சார்ந்த விசிக, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. எனினும், திமுக ஏன் ஆதரவளிக்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது உள்ளிட்ட 2 கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டதாலேயே இந்த தொகுதி மறுசீரமைப்பு ஆதரவளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், திமுக பாஜகவை இணைத்து மறைமுக கூட்டணியில் இருப்பதாக தவெக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் இந்தச்சூழலில் தான், கனிமொழி, ஆ. ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.கள் தற்போது டெல்லியில், அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் தான், சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கனிமொழி அமித்ஷாவைச் சந்தித்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது குறித்தும். திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் அமித் ஷாவிடம் பேசினோம்.
தொகுதி மறுவரையறை பற்றி யாரும் பேசாத காலத்திலேயே பேசிய கட்சிதான் திமுக: தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
கடந்த மசோதாவில் 50% உயர்வு குறித்து எதுவும் குறிப்பிடாமல் இருந்தது; திமுக வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு மசோதாவில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டிற்கு 59 எம்.பிக்கள் கிடைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.