முதல்வர் விஜயை அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வழக்கில் கைதான விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் எப்படி பேசவேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளதாகவும், அதனை மீறி இப்படி பேசுவது சரியானது அல்ல என்று நீதிபதி சுமதி கருத்து தெரிவித்தார். அதனையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தான், நீதிமன்றக் காவலில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தற்போது சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கும் எம்.பி. கனிமொழி முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலமாக இருக்கிறார் எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள திமுகவினர் தயார். அதேசமயம், பாளையங்கோட்டை சிறை திமுகவினருக்குப் புதிதல்ல; இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். திமுகவினர் யார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்கள் அதனைப் பெருமையாகவே கருதுவார்கள். அரசை விமர்சிக்கும் நபர்களை ஒவ்வொரு முறையும் சிறைக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இந்த அச்சுறுத்தல் வந்தது. தவெக அரசு ஜனநாயகத்தின் மீது அக்கறையின்றி செயல்படுகிறது. மேலும், காவல்துறையை எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது” என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இல்லை எனவும் பாஜகவுக்கு பயந்து கொண்டு தவெகவினர் ஆட்சி செய்கிறார்கள் எனவும் மோடியின் வழியில் தான் தவெக அரசு செயல்பட்டுவருகிறது எனவும் முதல்வர் விஜய் குறித்து எம்.பி. கனிமொழி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.