முக ஸ்டாலின் - மோடி web
தமிழ்நாடு

பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக? இரு கட்சிகளிடையே இணக்கம் என விமர்சனங்கள்!!

மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் எம்.பி கனிமொழி பங்கேற்றது, திமுக பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா என்ற விவாதத்தைத் தீவிரமாக்கியுள்ளது.

PT WEB

தமிழ்நாட்டில் தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்த பிறகு, இண்டியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. இந்தசூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்கு ஆதரவு கோரி திமுகவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறிவருகின்றன. அதேவேளையில், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என திமுக எம்.பி கனிமொழி சோமு கூற, அதனை வழிமொழிவது போல் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனும் பேசியிருந்தார்.

வானதி சீனிவாசன்

இந்தநிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடைந்ததையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில், திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி பங்கேற்றுள்ளார். வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருந்ததால், மக்களவையின் அலுவல் நேரத்தில், 80 விழுக்காடு வீணாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தை இண்டியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், அதில் கனிமொழி பங்கேற்றிருப்பது, திமுக பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா என்பதை தீவிர பேசுபொருளாக்கியிருக்கிறது.