kanchipuram x page
தமிழ்நாடு

பட்டு மாநகரம் ‘காஞ்சிபுரம்’ | கோட்டையாய் நிற்கும் திமுக? மீண்டும் வெல்லுமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைப் பற்றி இங்கு அறிவோம்.

PT WEB

பல்லவர் கட்டடக்கலை, சோழர் குடவோலை மரபு முதல் நவீன தொழிற்சாலைகள் வரை காஞ்சிபுரம் பல அடுக்குகள் கொண்ட மாவட்டம். ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் சாதி, பட்டியலின, நகர்ப்புற வாக்குகள் முடிவை நிர்ணயிக்கின்றன. சாம்சங் பணிநீக்கம், நெசவுத் தொழில் வீழ்ச்சி, விவசாய நில இழப்பு போன்றவை ஆட்சிக்கு எதிரான அதிருப்தியைப் பெருக்குகின்றன.

கோயில்களின் நகரம், ஏரிகளின் மாவட்டம், பட்டு மாநகரம் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட காஞ்சிபுரம், இன்று தமிழகத்தின் பொருளாதார இன்ஜினாகவும், அதேசமயம் அரசியல் சதுரங்கத்தின் முக்கிய மையமாகவும் திகழ்கிறது. பல்லவர் காலத்துக் கட்டடக்கலை முதல் சோழர் காலத்து ஜனநாயக முறையான குடவோலை வரை இதன் வரலாற்றுப் பெருமை நீள்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் தன்வசப்படுத்தி இருக்கிறது திமுக கூட்டணி.

திமுக கொடி

ஆலந்தூர் தொகுதி : ஆலந்தூர் தொகுதி திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக உருவெடுத்துள்ளது. சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட ஆலந்தூரில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தற்போதைய பிரதிநிதியாக உள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் திமுக 3 முறையும், அதிமுக மற்றும் தேமுதிக தலா ஒருமுறையும் வென்றுள்ள சூழலில், இத்தொகுதி நகர்ப்புற மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி: மற்றொரு முக்கிய தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தனித்தொகுதி, 3 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்களுடன் மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய பலம் கொண்ட இங்கு செல்வப்பெருந்தகை தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வரலாற்றுத் தழும்பு கொண்ட இந்த மண்ணில், சுமார் 25 சதவீதம் வரை உள்ள பட்டியலின மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. 'நோட்டா' இரண்டாம் இடத்தைப் பிடித்த வியப்பூட்டும் வரலாறும் இத்தொகுதிக்கு உண்டு

செல்வப்பெருந்தகை

உத்திரமேரூர் தொகுதி : உத்திரமேரூர் தொகுதி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களின் நேரடிப் போர்க்களமாக விளங்குகிறது. 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் க. சுந்தர். கடந்த 2021 தேர்தலில் வெறும் 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. விவசாயத்தை நம்பியுள்ள இப்பகுதியில் வன்னியர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குச் சாய்வுமே முடிவுகளை மாற்றியமைக்கின்றன.

காஞ்சிபுரம் தொகுதி : காஞ்சிபுரம் தொகுதியைப் பொறுத்தவரை, திமுக மற்றும் அதிமுக தலா 6 முறையும், பாமக ஒருமுறையும் வென்று சமபலத்துடன் உள்ளன. 2 லட்சத்து 76 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் எழிலரசன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முதலியார் சமூகத்தினர் வாக்குகளை மையமாக வைத்தே இங்கு வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகின்றனர்.

kanchipuram

மாவட்டம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் சாம்சங் உள்ளிட்ட பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் தொழிலாளர் போராட்டங்கள், நலிந்து வரும் நெசவுத் தொழில் மற்றும் விவசாய நிலங்களை விழுங்கும் கல்குவாரிகள் எனப் பல சவால்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2024 அக்டோபர் முதல் நீண்டகாலமாகத் தொடரும் சாம்சங் தொழிலாளர்களின் பணிநீக்க விவகாரம் தொழிலாளர் வர்க்கத்தின் வாக்குகளில் எதிரொலிக்கக்கூடும்.