நீட் தேர்வு சர்ச்சை காரணமாக டெல்லியில் நீண்டநாள் போராட்டம் நடைபெற, மாணவர்கள் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோருகின்றனர். காவல் துறை மோதல்களுக்குப் பின்னரும் போராட்டம் தளராமல் தொடர, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. இந்த உரையாடலை கமல்ஹாசன் பாராட்டி, கல்வி நம்பிக்கையை மீட்டெடுக்க மூன்று மாத செயல் திட்டத்துடன் தேசிய சீர்திருத்த ஆணையம் தேவை என கூறுகிறார்.
நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக் செய்யப்பட்டு மறு தேர்வு வைக்கப்பட்டதற்கும், இப்பிரச்னைக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தியும் புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக நீடித்துவரும் இப்போராட்டம் காவல்துறையினர் மற்றும் இளைஞர்கள் இடையேயான மோதலுக்கு பிறகும் தொடர்ந்து வருகிறது. இந்தசூழலில் தான் போராட்டம் நடத்திவரும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.
இந்நிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதை வரவேற்றிருக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன், கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான தேசிய ஆணையம் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
தன்னுடைய எக்ஸ்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கமல்ஹாசன், “மோதலுக்குப் பதிலாக உரையாடல் இடம்பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். இதைவிடுத்து குண்டுத் துப்பாக்கிகள், மின் அதிர்ச்சித் தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை.
தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தைக் குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் மூன்று மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை நான் வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.