விஜய் - கமல்ஹாசன் web
தமிழ்நாடு

”பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்.. ராஜ் பவன் அல்ல” - கமல்ஹாசன்

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

தமிழகத்தில் வரலாறு காணாத மும்முனைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவான நிலையில், ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் தாமதிப்பது மக்களாட்சிக்கு அவமதிப்பாகும் என கமல்ஹாசன் கண்டனம் தெரிவிக்கிறார். பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே அன்றி ராஜ் பவன் அல்ல என்று எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பை நினைவூட்டுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனை போட்டியை கண்டுள்ளது. முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்த விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்றதோடு, 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. 

விஜய்

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்பார் என சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜயை இன்னும் பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை. நேற்று நேரில் சென்று ஆளுநரை விஜய் சந்தித்து பதவியேற்க உரிமைகோரிய போதும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இன்று விஜய் இரண்டாவது முறையாக ஆளுநர் நேரில் சந்தித்து பேசியுள்ள நிலையில். இன்னும் ஆளுநர் அழைப்பு விடுக்காததற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.

என் சகோதரர் முக ஸ்டாலின் அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.

இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.

‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.