செய்தியாளர்: V.M.சுப்பையா
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஆண்டு விஷ சாராயம் அருந்தி சுமார் 67 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யபட்ட நிலையில், வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில், விஷ சாராயம் தொடர்பான வழக்கு 3 மாதங்களில் விசாரித்து முடிக்கபடும் எனவும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ{க்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கபட்டது. மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கக் கூடிய நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளனர்? என்பது தொடர்பாக பதிலளிக்க சிபிஐ தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.