நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவரின் மேடைப் பேச்சிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றே கூறலாம். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்து இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர் காளியம்மாள். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தவர். குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாளுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்பட்டது. இது, மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என நாளடைவில் அவர்களின் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார்.
அதன் பின்னர் அவர் பல்வேறு கட்சிகளில் இணையப்போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், எந்த முடிவையும் காளியம்மாள் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார். காலம் வரும்போது அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை இல்லத்தில் இன்று சந்தித்த காளியம்மாள், தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், நெருங்கியுள்ள நேரத்தில் அவர் அதிமுகவில் இணைந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தேர்தல் முதல் மீண்டும் என்னுடைய அரசியல் பயணம் அதிமுக மூலம் தொடரும். நான் அதிமுகவைத் தேர்வு செய்ததற்குக் காரணம், இந்த தலைமையை ஏற்றிருக்கக் கூடியவர் ஒரு அடிப்படைக் குடும்பத்தில் இருந்து வந்தவர். சாமானியக் குடும்பத்திலிருந்து வந்து ஒரு தலைமையை எட்ட முடியும் என ஒரு ஜனநாயகச் சூழல் இருப்பதாலேயும் ஒரு தமிழனுடைய தலைமையின் கீழ் இயங்குவதற்கான ஒரு மன உறுதியுடன் இருந்ததனாலேயும் அதிமுகவில் சேர்ந்துள்ளேன். நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியில் வந்தபிறகு, இன்னொரு அரசியல் அமைப்பிற்கு போகவில்லை என்பதற்கு என் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கும் என் இன மக்களுக்குமான அரசியல் பங்கேற்பை எப்படி உறுதி செய்வது என ஒரு கேள்வி எழுந்து கொண்டிருந்தது. ஒட்டுமொத்தமாக சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.
காளியம்மாள் மட்டும் தனித்து இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு மாற்றம் வருமா என மக்கள் ஏங்குகிறார்கள். அதற்கான பரிசை இந்தத் தேர்தல் தரும். நான் முடிவெடுப்பதில் எந்தக் காலதாமதமும் ஏற்படவில்லை. நான் மக்களின் களத்தில் இருந்தேன். நான் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மக்களுடன் களத்தில் இருந்துள்ளேன். களத்தில் ஒவ்வொரு நாளும் இருந்துகொண்டே வருகிறேன். நான் அரசியல் கட்சியிலிருந்தே விலகினேனே தவிர, மக்கள் அரசியலில் இருந்து விலகவில்லை. எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவையல்லவா? ஆறு வருடம் கத்தியிருக்கிறேன் அல்லவா? என் குழந்தைகளைப் பார்க்க வேண்டும், இந்த ஒரு வருட காலமாகத்தான் அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டுத்தான் நான் அரசியல் களத்திற்கு வந்தேன். 2010 ஆண்டிலேயே அதிமுகவில் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர் இந்த காளியம்மாள்” என்றார்.