பாஜகவில் இணைகிறாரா காளியம்மாள்? வதந்திகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
சமூக ஆர்வலர் காளியம்மாள் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் காளியம்மாள் இருவரும் பதிலளித்துள்ளனர். இருவரும் கூறியது என்ன? காளியம்மாள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதா? விரிவாகப் பார்க்கலாம்.
செய்தியாளர் மருதுபாண்டி
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவரின் மேடைப் பேச்சிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றே கூறலாம். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்து இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர் காளியம்மாள். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தவர். குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாளுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என நாளடைவில் அவர்களின் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார்.
அதன் பின்னர் அவர் பல்வேறு கட்சிகளில் இணையப்போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், எந்த முடிவையும் காளியம்மாள் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில்தான் இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வைத்து ஒரு முக்கிய அரசியல் பிரமுகரைச் சந்தித்ததாக தகவல் வெளியானது. அவரோடு ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூடிய விரைவில் அந்த நபர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
பின்னர் அந்த முக்கிய நபர் சமூக ஆர்வலரும் நாதக முன்னாள் மகளிர் பாசறை ஒருங்கினைப்பாளருமான காளியம்மாள்தான் என்றும் தகவல் வெளியானது. ஆனால், உறுதியாக இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ செய்திகளோ எதுவும் வெளியிடப்படாத நிலையில் இந்த சந்திப்பு உண்மையா என்பது குறித்து புதியதலைமுறை செய்தியாளர் மருதுபாண்டி சமூக ஆர்வலர் காளியம்மாளிடம் பேசினார்.
காளியம்மாளை போனில் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, எந்த அரசியல் கட்சியில் நான் பயணிக்க போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். அத்தோடு பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவரும் தகவல் உண்மையா என்ற கேள்விக்கு, எந்த கட்சி என்பதை நான் முடிவு செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, "அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை; மக்கள் பிரச்சனைக்கும் மீனவர்கள் கைது குறித்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறேன். வேற எந்த காரணத்தோடும் யாரையும் சந்திக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.
அதே நிலையில் பாஜகவில் காளியம்மாள் இணையப்போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையா என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "தனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் நிறைய பேர் என்னிடம் இதுகுறித்து கேட்டார்கள். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது" என்றும் தெரிவித்தார். முக்கியமான பிரமுகர் ஒருவர் இணைய உள்ளதாக கேட்டதற்கு அப்படி எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.