அலிஷா அப்துல்லா - கலாநிதி வீராசாமி!
அலிஷா அப்துல்லா - கலாநிதி வீராசாமி! புதிய தலைமுறை
தமிழ்நாடு

“தேர்தல் நேரத்தில் அவதூறு பரப்பவே இந்த வழக்கு..” - அலிஷா அப்துல்லா புகார் குறித்து கலாநிதி வீராசாமி!

யுவபுருஷ்

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை அண்ணாநகர் Bபிளாக் 6 வது தெரு பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கட்டடத்தின் முதல் மாடியில் பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா, மாமனார் தேவராஜ் தனது மனைவியோடு வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கார் நிறுத்துவதில் இந்த இருதரப்புக்கும் இடையே பார்க்கிங் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா திமுக எம்பி தரப்பினர் தங்களிடம் பிரச்னை செய்ததாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல, சரவணன் என்பவரும் அலிஷா அப்துல்லா, அவரது மாமனார் தேவராஜ் மற்றும் தேவராஜனின் மனைவி கலைவாணி ஆகியோர் காரை ஏற்றி தங்களை கொலை செய்ய முயற்சித்ததாக புகார் அளித்தார்.

இதனையடுத்து, சரவணன் அளித்த புகாருக்கு பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா, அவரின் மாமனார் தேவராஜ், தேவராஜின் மனைவி கலைவாணி ஆகியோர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா கொடுத்த புகாருக்கு போலீசார் CSR வழங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அண்ணா நகர் காவல் நிலையத்தில், விசாரணை குறித்து கேட்பதற்காக பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா மற்றும் அவரின் கணவர் நவீன் தேவராஜ் ஆகியோர் வருகை தந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த அலிஷா அப்துல்லா

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அலிஷா அப்துல்லா, “நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு எனது மாமனார் கார் பார்க் செய்து விட்டு வீட்டுக்கு சென்றபோது திமுகவை சேர்ந்த சில நபர்கள் வந்து இங்கு பார்க் செய்யக்கூடாது. இங்கு எம்.பி கலாநிதி வீராசாமியின் கார் வருகிறது என்று கூறினார்கள். காரை எடுக்கவில்லை என்றால், காரை லாக் செய்வோம் என எனது மாமியாரிடம் கோபமாக 30, 40 நபர்கள் சுற்றி வளைத்து அநாகரிமாக பேசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நேற்று மதியம் புகார் கொடுக்க காவல் நிலையம் வந்தேன். பிரச்னை நடந்த போது எம்.பி கலாநிதி வீராசாமி காரில் அமர்ந்திருந்ததார். பிரச்னை செய்ய சொன்னதே அவர்தான். மக்கள் பிரச்னையை தீர்க்க வேண்டிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே பிரச்னையை தூண்டி வருகிறார்” என்றும் கூறினார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேற்று இரவு தெரிவித்து விட்டோம். அவர் எனக்கு ஆதராவாக இருப்பதாகவும், காவல்துறையால் வேண்டுமென்றே போடப்பட்ட இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.

இதற்கிடையே, அண்ணா நகரில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கலாநிதி வீராசாமி, “இந்த சம்பவம் நடந்தபோது எனது அலுவலகத்தில் விசிட்டர்ஸ் வந்திருந்தனர். நான் அவர்களைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்ததேன். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், பாஜக நிர்வாகி வீட்டினருக்கும் இடையே பிரச்னை எழுந்தது. என் அலுவலகத்திற்கு மேலே பாஜக நிர்வாகியின் உறவினர்கள் இருப்பதே எனக்கு தெரியாது. நேற்று காலைதான் அவர்கள் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லாவின் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இதே கட்டடத்தில் என் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கலாநிதி வீராசாமி

எனக்கு யார் சொத்தையும் அபகரிக்க வேண்டிய எண்ணமும், அவசியமும் இல்லை. தேர்தல் வரும் நேரத்தில் என் மீது அவதூறு பரப்ப பாஜகவினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நானோ அல்லது எனது தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை. நேற்று முன்தினம் எனது அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் அங்கிருந்து விட்டு, பிறகு அலுவலகம் வந்ததேன். இந்த விஷயத்தில் தேவையில்லாமல் என் பெயரை பாஜகவினர் கெடுக்க நினைக்கின்றனர். புகார் கொடுத்த சரவணனுக்கும் எனக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. புகார் கொடுத்த அந்த சரவணன் தனது அலுவலகத்துக்கு பக்கத்து வீட்டு சரவணன்” என்று விளக்கமளித்தார். மேலும், தன் மீது அவதூறு பரப்பி வரும் பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா மீது, தனது வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.