ஜி.ஆர்.சுவாமிநாதன்
ஜி.ஆர்.சுவாமிநாதன்  web
தமிழ்நாடு

கோவில் சம்பிரதாயங்களில் அரசு அதிகாரிகள் தலையிட முடியுமா? - நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து!

PT WEB

‘கோவில் கட்டுப்பாடுகள் மற்றும் காலங்காலமாக கடைப்பிடித்து வரும் சம்பிரதாயங்கள் - இவற்றில் அரசும், அரசு அதிகாரிகளும் தலையிட்டு பிரச்னையை கையாள்வதும், தீர்த்துவைப்பதும் சரியா?’ என்கிற கண்ணோட்டத்தில், ஸ்மார்ட் என்கிற ஊடக நிறுவனம் ஒரு விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் நடந்த அந்நிகழ்ச்சியில் "கோவில் விடுதலை அரசியலா, அவசியமா" என்கிற தலைப்பில் விவாதங்கள் நடத்தப்படவிருந்து. அந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பேசிய நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன், தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

கோவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா?

நிகழ்ச்சி மேடையில் பேசிய நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன், “இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்வதற்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் வழக்கறிஞர்களிடம் கையெழுத்து பெறுவதாக அறிந்தேன். முதலாவதாக இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது எனது தனிப்பட்ட விருப்பம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதுபோலான நிகழ்ச்சியில் மட்டுமல்ல, இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் நிகழ்ச்சிகளில் கூட நான் கலந்து கொள்கிறேன். அந்த நிகழ்ச்சியில் நான் அமர்ந்து பார்ப்பது யாருக்கும் தெரியாது, யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து கலந்து கொண்டுவருகிறேன். ஆனால் அதில் கலந்து கொள்வது குறித்து கேள்வி எழுப்பாதவர்கள் “கோவில் விடுதலை அரசியலா? அவசியமா?” நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து மட்டும் ஏன் கேள்வி எழுப்புகின்றனர் என்பது புரியவில்லை.

ஜி.ஆர்.சுவாமிநாதன்

கோவில் மற்றும் சம்பிரதாய நிகழ்வுகளில் அரசும் அதிகாரிகளும் தலையிடுவது பாரம்பரியத்திற்கு முரணாக அமைந்துள்ளது, சம்பிரதாயம் சம்பந்தமாக அரசு உத்தரவு போட முடியுமா என்பது கேள்விக்குறி” என்று கூறிய அவர், இது போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், “தொடர்ந்து சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறேன். வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக வெளியிடப்பட்ட நாடார்களின் வரலாறு கருப்பா காவியா என்கின்ற புத்தக நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி அளித்தேன்.

நீதிபதியாக இருந்த எனது வகுப்பு தோழன் மீது நிதி முறைகெடு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அதன் விசாரணை அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டு அது குறித்து விசாரித்து நான் அறிக்கை அளித்ததன் அடிப்படையில் அவர் நீதிபதி பணியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த அளவிற்கு நான் பொதுவானவனாகவே இருந்து வருகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.