புத்தக வெளியீட்டு விழா FB
தமிழ்நாடு

”வழிபாட்டு உரிமை சலுகை அல்ல; அது அடிப்படை உரிமை” - நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன்

கோயில் நுழைவு என்பது ஒரு எளிய மத விவாதம் அல்ல; சமூக அடிப்படை அமைப்பு, மனித கண்ணியம், அரசியல் அமைப்பு, சட்டத்தின் எல்லைகள் குறித்த ஆழமான சிந்தனைக் களம் என நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

திமுகவின் தேசிய ஊடகச் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய ’தி பீப்புல்ஸ் சாங்டம் - The 100 Years Struggle to Democratize Temple in India’ (மக்களின் சரணாலயம் – இந்தியாவில் கோயில்களை ஜனநாயகமயமாக்குவதற்கான 100 ஆண்டுகாலப் போராட்டம்) என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை மாநகராட்சி கட்டடம் அருகே உள்ள விக்டோரியா அரங்கத்தில் நடைபெற்றது. இதில், எம்.பி. கனிமொழி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பங்கேற்று உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் பேசுகையில், இன்றைய நிகழ்வு ஒரு புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல; நமது சமுதாயம் கடந்து வந்த கரடுமுரடான பாதையை நினைவுகூறும் முக்கியமான வரலாற்றுத் தருணம். சமீபகாலத்தில் நான் படித்த நூல்களில் என்னைச் சிந்திக்க வைத்த சிறப்பான நூல் இது. கோயில் நுழைவுப் போராட்டங்கள் ஏன் முக்கியம்? அம்பேத்கரும் தந்தை பெரியாரும் ஏன் வரலாற்றில் இவ்வளவு பெரிய ஆளுமைகளாக உயர்ந்து நிற்கிறார்கள்? என்ற இரண்டு முக்கியமான கேள்விகளுக்குக் கோயில் நுழைவு என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆசிரியர் மிக நுட்பமாகப் பதிலளித்துள்ளார்.

சமூகத்தை மலரச் செய்வதற்கு வழிபாட்டுத் தளங்கள் எவ்வாறு பயன்பட்டன என்பதை இந்த நூல் ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது. பக்தர்களுக்கிடையேயான உறவுமுறை சமூகத்தை எவ்வாறு வடிவமைத்தது, அரசின் மீது மதத்தின் கட்டுப்பாடு ஏன் தேவைப்பட்டது என்பதற்கான வலுவான வாதங்களையும் ஆதாரங்களையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார்.

இந்தப் புத்தகத்தில் இரண்டு உண்மைகள் என்னை உலுக்கின. ஒன்று, கோயிலில் அர்ச்சகர் இருக்கும் இடத்திலிருந்து ஒவ்வொரு ஜாதியினரும் கணக்கின் அடிப்படையில் எத்தனை அடி தூரத்தில் இருக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இன்னொன்று, சாதியின் அடிப்படையில் ஒரு சாட்சி நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது; குறிப்பிட்ட தொலைவில் நின்று அறிக்கை அளிக்க வேண்டும்; கேள்விகள் கத்திக் கேட்கப்படும்; பதிலும் உரக்கச் சொல்லப்படும். இதுவே நீதிமன்றத்தில் பதிவாகும் சாட்சியாக இருந்தது. எவ்வளவு கொடுமையான சமூகத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதை இந்தப் பக்கங்கள் காட்டுகின்றன.

இருண்ட காலத்திலிருந்து சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்கள் வழியாக இன்று நாம் எப்படி முன்னேறியிருக்கிறோம் என்பதை உணர்த்தும் வரலாற்று ஆவணம்தான் இந்த நூல். நாம் எங்கே இருந்தோம், எத்தகைய போராட்டத்தின் மூலம் இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதை இந்தத் தலைமுறையும் வரும் தலைமுறைகளும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய மகாதான நூல்.

கோயில் நுழைவு என்பது ஒரு எளிய மத விவாதம் அல்ல; சமூக அடிப்படை அமைப்பு, மனித கண்ணியம், அரசியல் அமைப்பு, சட்டத்தின் எல்லைகள் குறித்த ஆழமான சிந்தனைக் களம்.

நான் எந்தச் சிந்தனையையும் உங்கள் மீது திணிக்கப் போவதில்லை; நான் வகிக்கும் பதவியால் அதைச் செய்யவும் முடியாது. மாறாக, மூன்று முக்கியமான விவாதங்களை உங்கள் முன் வைக்கிறேன். ஒரு மனிதனைப் பிறப்பின் காரணமாகவோ அடையாளத்தின் காரணமாகவோ இறைவனை வழிபடுவதிலிருந்து தவிர்ப்பது அவனது அடிப்படைக் கண்ணியத்தையும் பறிப்பது போன்றது. அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவு தீண்டாமையை ஒழிப்பதைக் குறிக்கிறது. கோயில்கள் அனைத்தும் மக்களுக்காகத் திறக்கப்படுவது இதன் அடிப்படையில்தான். வழிபாட்டு உரிமை என்பது மதச் சலுகை அல்ல; அது குடிமகனின் அடிப்படை உரிமை.

அரசியல் அமைப்புத் தர்மத்தைச் சமூகச் சீர்திருத்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது, தனிமனிதனின் சுதந்திரமும் சமத்துவமும் எங்கே நிற்கிறது என்ற கேள்வி எழுகிறது. 100 ஆண்டுகள் பழமையான நடைமுறையாக இருந்தாலும், சபரிமலை கோவிலில் உச்சநீதிமன்றம் சொன்னதுபோல, அது அரசியல் அமைப்பு வழங்கும் சமத்துவத்திற்கும் பாலின நீதிக்கும் எதிராக இருக்கும்போது அரசியல் அமைப்புத் தர்மம் வெல்ல வேண்டும். ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோவில்கள் மட்டும் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, பிற மதங்களுக்கு முழுச் சுயாட்சி அளிக்கப்படும்போது அது சமச்சீரான மதச்சார்பின்மையா என்ற சட்டப் போராட்டமும் இதன் பின்னால் இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.