விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
இளைஞர் அஜித்குமார் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு, நகை காணாமல் போன வழக்கில் போலீஸார் ஏன் FIR பதியவில்லை? என கேள்வி எழுப்பியது. யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது?, யாருடைய உத்தரவின்பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை காலை முதலே நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் விசாரணை தொடங்கியது.. அஜித்குமாரின் இடைக்கால பிரேதபரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிற்பகல் விசாரணையில் மதுரை மருத்துவமனையின் தலைமை மருத்துவர், உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் மற்றும் மடப்புரம் கோவிலின் இணை ஆணையாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. அதோடு வீடியோ காட்சிகளை எடுத்த இளைஞரிடமும் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். காவல்துறையினரின் விசாரணையில் சிசிடிவி காட்சிகளை எடுத்து ஏன் விசாரணை செய்யவில்லை, எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் விசாரித்தது ஏன்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
செய்தியாளர் களத்தில் இருந்து அளித்த தகவல்கள்....
அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை எனவும் உயரதிகாரிகளைப் பாதுகாக்கும் வகையிலே உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். வரும் காலங்களில் காவல்துறையைச் சேர்ந்த எந்த நபரும் இதுபோல நடந்துகொள்ளக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஆபத்தானது எனத் தெரிவித்த நீதிபதிகள், உடலில் எந்த பாகமும் விடுபடாமல் அத்தனை இடங்களிலும் காயங்கள் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.