விஜய் pt web
தமிழ்நாடு

PT INTERVIEW : "தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் விஜய்" - விளாசிய மணி

"அரசியல் கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் விஜய். நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு விஜய் மாற்று கிடையாது. அவரை மாற்று என நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் படமுடியும்" - பத்திரிகையாளர் மணி

PT digital Desk

கரூரில் செப்டம்பர் 27 (சனிக்கிழமை) நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். ஆனால், தவெக தரப்பில் இருந்து நேரடியாக யாரும் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்காத நிலையில், தவெக தலைவர் விஜயும் எக்ஸ் பக்கத்தில் மட்டும், "கவலையில் உழன்று கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பல தரப்பில் இருந்தும், விஜய் கூட்டத்திற்கு வந்துதான் உயிரிழந்திருக்கிறார்கள்; ஆனால், விஜய் ஏன் இன்னும் நேரடியாக சென்று பார்க்கவில்லை எனத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சம்பவம் நடந்த மூன்று நாள் கழித்து தவெக தலைவர் விஜய் தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது விளக்கத்தை அளித்திருக்கிறார். முன்னதாக பத்திரிகையாளர் மணி pt nerpada pesu யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலை தற்போது பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 41 பேர் மரணம்.. இந்த சம்பவத்தை எப்படி புரிந்துகொள்வது?

பத்திரிகையாளர் மணி

இது நடப்பதற்காக காத்துக்கொண்டிருந்த நிகழ்வு. திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அவர் பேசிய போதே அரசு விழித்திருக்க வேண்டும். ஏனென்றால், அந்த 4 ஊர்கள்களில் இதுபோன்று நடக்காமம் இருந்ததுதான் ஆச்சரியம். கரூரில் நடந்த சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் "A Disaster waiting to happen"

இதற்கு, முதற்காரணம் விஜய்தான். ஒரு கூட்டத்தை 7 மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக ஐந்தாவது கூட்டத்தில் இதை செய்திருக்கிறார்.

இரண்டாவது குற்றவாளி பொதுமக்கள். மக்கள் திருந்தவில்லை என்றால் எவ்விதமான பேரிடர்களையும் நம்மால் தடுக்க முடியாது. இயற்கை பேரிடர் என்பது வேறு; ஆனால் இது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு.

மூன்றாவது குற்றவாளி அரசு, அந்த சிறிய இடத்தில் அனுமதி கொடுத்த மாவட்ட நிர்வாகம்... இந்த மூன்று பேரையும்தான் நான் குற்றவாளி எனக் கூறுவேன்.

முதல் குற்றவாளி விஜய் தான் இதில், எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதை மறுப்பவர்கள் கண்மூடித்தனமாக விஜயை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது குருட்டுத் தனமாக திமுக-வை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும். விஜய்க்கு 8.45-மணிக்கு பேசுவதற்கு அனுமதி கொடுத்தால், அவர், 8.45-மணிக்குத்தான் அவர் வீட்டில் இருந்து கிளம்புகிறார். 7 மணி நேரம் மக்கள் அங்கு சாப்பாடு தண்ணீர் இல்லாமல் காத்திருக்கிறார்கள். என்ன இது?

அடிப்படையில், விஜய் ஒரு நடிகர். தவெக ஒரு ரசிகர் கூட்டமாக இருக்கிறது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி நடந்துகொள்ளமாட்டார். இவரை விட பலமடங்கு ரசிகர் கவர்ச்சி கொண்ட  எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் கூட்டங்களில் இம்மாதிரியான கூட்ட நெரிசல் ஏற்பட்டதில்லை. மதநிகழ்வுகளிலும், இலவசங்கள் வழங்கும் நிகழ்வுகளிலும் கூட்டநெரிசல் சம்பவங்கள் நிகழ்ந்து மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அரசியல் கட்சி கூட்டங்களில் கூட்ட நெரிசலால் மக்கள் உயிரிழந்த நிகழ்வு என்பது இதுவரை நடக்கவில்லை என்றே சொல்லலாம்.

முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லை. யார் கட்டுப்பாட்டிலும் யாருமே இல்லை. ட்ரான்ஸ்ஃபார்மர்களில் ஏறி நிற்கும் கூட்டத்தை இதுவரை பார்த்திருக்கிறீர்களா? ஒரு அரசு என்னதான் செய்யும். மின்தடை ஏற்படவில்லை என்றால் அரியலூரிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். மற்றவர்கள் குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை. யார் ஆரம்பித்தது? யார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது? கரூரில் நடந்த இந்த துயரத்திற்கு முதற் காரணம் விஜய் மட்டும் தான்.

விஜய் பரப்புரைக்கு தாமதமாக வருவதற்கு என்ன காரணம்?

அவர் வெளிப்படையாக மக்களின் கூட்டத்தைப் பார்த்து ரசிக்கிறார். 8 மணி நேரம் மக்கள் சாப்பாடு தண்ணீர் இல்லாமல், காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வண்டியில் வரும் போது, லைட்டை போட்டுப் போட்டு அனைத்து விளையாடி கொண்டிருக்கிறார். இது எந்த மாதிரியான நடைமுறை. தன்னைத்தானே ரசித்துக்கொண்டிருக்கிறார். இது நாசீசிஸ்டிக் மனநிலை. மேலும், அவரது பேச்சில் எந்த முன்னேற்றமுமில்லை.. வாரத்திற்கு ஒருமுறை வருகிறார்.. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஒரே டெம்ப்ளேட்டில் பேசுகிறார். எதாவது புது விஷயங்களைப் பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை. இவரை ஆதரிப்பவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமல்ல. இவருக்கு இம்முறை வாக்களிக்கலாமா என்று நினைக்கும் பொதுமக்களையும் உங்கள் பக்கம் கொண்டு வரவேண்டும். அவரது பேச்சில் அந்த சாராம்சம் கூட இல்லை. வாரத்திற்கு 10 நிமிடம் பேசுவதற்கு இவ்வளவு அலம்பல்கள். அது இந்த அளவுக்கு ஒரு பேரிடரில் கொண்டு வந்து முடிந்திருக்கிறது.

கரூரில் உயிரிழப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது ஏன் அவர் உடனடியாக கிளம்பி சென்னை சென்றார்?

எனக்கு அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் சென்றிருப்பார். ஆனால், அவர் ஒரு நடிகர். பிரச்னைகள் வந்தால் ஓடி ஒழிகிறார். அரசியல் கட்சித் தலைவராக அவர் இருந்திருந்தால் ஒரு ராணுவத்தையே கொண்டு வந்து அவரைத் தடுத்து நிறுத்தியிருந்தாலும் அவர் அங்கு சென்றிருப்பார்.

அவர் அரசியலுக்கு வந்ததே ஏதோ விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார். இந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனநிலை அவருக்கு இல்லை. ஜெயலலிதாவோ, கலைஞரோ, ஸ்டாலினோ, எடப்பாடி பழனிசாமியோ மக்களிடம் சென்றிருப்பார்கள். இவர் அடிப்படையில் ஒரு நடிகர்தான். நடிகர்கள் நாடாளக்கூடாது என எந்த சட்டமும் இல்லை. ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்தப் பிறகு அவர் அரசியல்வாதியாக மாறியிருக்க வேண்டும்.. அவரொ அவ்வாறு மாறவில்லை.

நான் மீண்டும் சொல்கிறேன். அரசியல்வாதிக்கான பண்புகள் என்பது வளர்த்துக்கொள்ளக்கூடியது. ஆனால், விஜயிடம் அந்த மனநிலைகூட இல்லை.

அரசியல் கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் விஜய். நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு விஜய் மாற்று கிடையாது. அவரை மாற்று என நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் படமுடியும்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவெக-வினர் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள்?

முட்டாள் தனமாக இந்த விஷயத்தை தவெக-வினர் கையாள்கின்றர். ஒரு ஒருங்கிணைப்பு கிடையாது. இரண்டு மனு போடுகிறார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் செல்கிறார்கள். ஆதவ் அர்ஜுனா நேரடியாக செந்தில் பாலாஜி தன் காரணம் என கூற ஆரம்பித்திருக்கிறார். அதை விஜய் வந்து பேச வேண்டுமில்லையா? அந்த தைரியமாவது வேண்டுமில்லையா..

இன்னும் அவர் பொறுப்பேற்கக்கூட இல்லையே. நானும் பொறுப்பேற்கிறேன் என அவர் சொல்லவேண்டுமில்லையா. பின் என்ன அவர் தலைவர். அடிப்படை நேர்மைகூட விஜயிடம் இல்லையே. எந்த மாநாட்டிலாவது தொண்டர்கள் டிராஸ்பாரம் மீது ஏறி நின்றிருக்கிறார்களா? இதில் அரசு என்னதான் செய்யும். இவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இவர்களை வளரவிடுவது ஆபத்து. தவெக தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். மேலும், நான் அண்ணாமலை சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் ஒப்புக்கொள்கிறேன். கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் எஸ்.பி யை  சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிர்வாக ரீதியாக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். 41 பேர் இறந்திருக்கிறார்கள்; அரசாங்கத்திற்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆனால், முதல் குற்றவாளி விஜய். இவர்களெல்லால் ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாக போய்விடும். அவர் திரும்ப நடிக்க செல்வதுதான் நல்லது. அவரது இயல்பு அரசியலுக்கு ஒவ்வாதது.

அரசியல்வாதியோட அடிப்படை பண்பு மக்களுடன் பேசுவதுதான். ஆனால் ஊடகங்கங்களிடமே அவர் பேசுவதில்லை. ஊடகங்களை மதிக்காதவர்கள் எப்படி அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். மீடியா தப்பானதாக இருக்கட்டும், ஆனால், அது தப்பு என்பதையாவது மீடியாவிடம் தெரிவிக்க வேண்டும். மீடியாவின் மூலமாக மட்டும்தான் மக்களிடம் பேச வேண்டும். ஊடகத்தை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயக பண்பு.

நேரடியாக முதலமைச்சராக அமர ஆசைப்படுகிறார். அது இயற்கைக்கே விரோதமானது. 1000 விமர்சனங்கள் ஸ்டாலின் மேல் இருக்கலாம்... ஸ்டாலின் இந்த இடத்திற்கு வருவதற்கு 50 வருடம் ஆகியிருக்கிறது. அவரை எதிர்ப்பதற்கு நீங்கள் என்ன தகுதி வைத்திருக்கிறீர்கள்.. அதை வளர்த்துக் கொள்ளவாவது வேண்டும். ஆனால் அதையும் அவர்கள் செய்வதில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு இன்று மாற்று இல்லை. ரொம்பவே பாதுக்காப்பாக இருக்கிறார்.  கொள்கை ரீதியாகவும் சரி., நிர்வாக ரீதியாகவும் சரி. அவரை எதிர்க்கும் அளவிற்கு விஜய் பொருத்தமற்றவர். அவர் திருந்துவாரா என்பது தெரியாது.

ஏன் தவெகவினர் தங்களை தூரப்ப்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு அச்சம்தான் காரணமா? இல்லை தயக்கமா?

அந்தக் கட்சிக்கு கட்டமைப்பே இல்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாமல், அவர்களைக் கட்சி என சொல்வதே தவறு. தமிழ்நாடு அரசையும், காவல்துறையும் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் அரசியல் கட்சியின் கூட்டத்தை கையாளவில்லை. ரசிகர்களின் கூட்டத்தை கையாண்டு கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான பிரச்சாரத்திற்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

தன்னை காப்பாற்றிக்கொள்ள விஜய் எண்டிஏ கூட்டணியில் சேருவார் எனத் தகவல் வருகிறது. திமுக எதிர்க்க வேண்டும் என்றால் கொள்கை ரீதியாக எதிர்க்க வேண்டும். குருட்டுத் தனமாக எதிர்த்தால் அது சரியாக இருக்காது. விஜய் கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களில் என்னவிதமான அரசியல் நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். விஜய் சுற்றி மட்டும்தான் தவெகவினர் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சினிமா மோகம் இருக்கிறது. யாராவது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக் கொண்டு சொல்வார்களா? அப்படி தூக்கிகொண்டு ஒரு பெண் ஓடுகிறார். அப்படி இருக்கும் போது இப்படித் தான் நிகழும்.. இந்த கரூர் சம்பவத்தில் அரசையும் காவல்துறையும் குறை சொல்வது ஏற்புடையதற்றது.