செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத்தவிர பௌர்ணமி தினங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். அப்படி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் 14 பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று (ஜன 11) வருகை தந்தனர்.
தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய உடையான சேலை உடுத்தி 12 பெண்கள் வந்த நிலையில், அவர்களோடு வேஷ்டி அணிந்தபடி 2 ஆண்களும் வந்தனர். 14 பேரும் சாமி தரிசனத்துக்கு சென்றனர். தொடர்ந்து கோயிலில் உள்ள உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்களை தரிசனம் செய்தனர். கோயிலை விட்டு வெளியே வந்த ஜப்பான் பக்தர்கள் அனைவரும், முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர். இது அங்கிருந்தோரை பரவசமடைய வைத்தது.