it raid
it raid pt desk
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் ஐந்தாவது நாளாக தொடரும் ரெய்டு!

webteam

கரூரில் கடந்த 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரின் இல்லம், குவாரிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அப்போது கரூர் நகர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்தில் சோதனை நடத்த வந்த அதிகாரிகளை ஏராளமான திமுகவினர் முற்றுகையிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செந்தில் பாலாஜி

தொடர்ந்து, வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்ளிட்ட 4 அதிகாரிகளையும் திமுகவினர் முற்றுகையிட்டு, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியையும் திமுக உடைத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளை மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெண் அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

it raid

அமைச்சரின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்த விடாமல் திமுகவில் திரண்டு தடுத்தனர். இதையடுத்து, அன்றைய தினம் சோதனையை கைவிட்ட அத்தனை அதிகாரிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து, அன்று மாலை மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் பல இடங்களில் சோதனை தொடங்கியது. இந்நிலையில், அன்றிரவே தெலங்கானா மற்றும் கோயம்புத்தூரில் இருந்து மத்திய பாதுகாப்பு படை போலீஸ் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கரூருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பாதுகாப்புடன் கடந்த நான்கு தினங்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

police

குறிப்பாக செந்தில் பாலாஜியின் நண்பரும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஒப்பந்ததாரருமான சங்கர் என்பவருடைய அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரியும் சோபனா என்பவருடைய வீட்டில் கடந்த நான்கு தினங்களாக சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல கரூரில் உள்ள செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான கொங்கு மெஸ் உணவகத்தின் உரிமையாளர் மணி மற்றும் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன் மற்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களுக்குச் சொந்தமான சுமார் 30க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் நண்பரும் அரசு பணி ஒப்பந்ததாரருமான சங்கர் என்பவருடைய அலுவலகத்தில் சோதனை நடத்த முயன்றனர். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது இல்லத்திற்குச் சென்று அலுவலக சாவி கொண்டு வரும்படி கூறியும், சாவியை எடுத்து வராததால், சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திரண்டு வருவாய் ஆய்வாளரை சாட்சியாக வைத்து அலுவலக பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டனர்.

இதுவரை நடைபெற்ற நான்கு நாள் சோதனையில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறையினர் அலுவலக ரீதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தான்தோன்றிமலை காவல் நிலையங்களில் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

it raid

இந்த வழக்கின் அடிப்படையில் இதுவரை 20 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஐந்தாம் நாளாக சோதனை தொடர்வதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.