கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து IT ரெய்டு!
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு பூட்டப்பட்டுள்ளதால் அங்கு மட்டும் சோதனை நடைபெறவில்லை. கடந்த மூன்று நாட்களாக சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வந்தன.

இந்நிலையில், அமைச்சரின் நண்பரும் அரசு பணிகள் ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கர் என்பவருடைய அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்த முயன்றனர். அப்போது அவருடைய அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அருகில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலக சாவியை எடுத்து வரும்படி கூறினார். ஆனால், அவர்கள் சாவி கொண்டு வந்து தராததால், தமிழக அரசு ஆய்வாளரை சாட்சியாக வைத்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். தொடர்ந்து அலுவலக கீழ் தளத்தில் உள்ள இரண்டு அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
பின் முதல் தளத்தில் உள்ள அறை கதவுகளின் பூட்டையும் உடைத்தனர். இப்படியாக தற்போது அங்கு இரண்டு தளங்களிலும் தற்போது 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூட்டப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரின் அலுவலக பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட தொடங்கியுள்ளது அவர் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடைபெறும் இடத்தில் 50-க்கும் அதிகமான மத்திய பாதுகாப்பு படையினரும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.