சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கிண்டி ஒலிம்பியா அருகே சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.