தவெக ஆட்சியின் எழுச்சியுடன், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்தியா டுடே–சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் அவர் 9.2% ஆதரவுடன் 3வது இடம் பிடித்ததாக வெளியானது. இதை குறித்து கேட்கப்பட்டபோது, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், விஜயின் தலைமையைப் புகழ்ந்தாலும், பிரதமர் வேட்பாளர் கேள்விக்கு நேரடி பதிலைத் தவிர்த்தார்.
கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டில் தவெக ஆட்சியைப் பிடித்தது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிய நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் என சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றன. இதையடுத்து, பிரதமர் வேட்பாளாராக விஜயை முன்னிறுத்திக் கொள்ள இந்த திட்டங்களை தவெக செயல்படுத்துகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும் ஒரு பாரத பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியபோது இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியது. அதைத்தொடர்ந்து தவெகவின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் விஜய் இந்தியாவின் பிரதமராவார் என வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்க தொடங்கியபோது, இது செய்தி நிறுவனங்கள் சில கருத்துக்கணிப்பு எடுக்கும் அளவிற்கு பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் இண்டியா டுடே - சி-வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாட்டின் அடுத்த பிரதமருக்கான விருப்பத்தேர்வில் 9.2% ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்ததாக செய்திகள் வெளியாகின. மோடி, ராகுல் காந்திக்கு பிறகு விஜய் 3வது இடம் பிடித்ததாக அந்த கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியது.
இந்தசூழலில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அடுத்த பிரதமர் வேட்பாளரா? என்ற கேள்வி, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இடம் வைக்கப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைவரை பொறுத்த வரை தெளிவாக இருக்கிறார். தமிழகம் அவரை நம்பி வாக்களித்து இருக்கிறது, இரண்டு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம், இரண்டு மாதத்தில் புதிய சின்னத்தில் பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக, எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மக்கள் விரும்பும் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்த அவர்,
*என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்* என கூறி பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைச்சர் செங்கோட்டையன் கிளம்பி சென்றார்.