ADMK F ministers Join TVk admk vs tvk
தமிழ்நாடு

அதிமுகவை கபளீகரம் செய்கிறதா TVK? கரையும் தமிழ்நாட்டின் ஆண்ட கட்சி.. 1977 நிலை மீண்டும் வருகிறதா?

தவெகவின் வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை தற்போது அதிமுகவுக்கும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Praveen Joshva L

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் தொடர்ந்து இணைகின்றனர். தொடர்ச்சியான தோல்வி, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதன் காரணமாக அதிமுகவில் சோர்வு அதிகரித்து, காங்கிரஸ் போல 1977க்குப் பிறகு இரண்டாம் கட்சி அந்தஸ்தையும் இழக்கும் அபாயம் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை வென்ற நிலையில், அதிமுக கூட்டணி 53 இடங்களோடு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஏற்கனவே தொடர் தோல்வியில் அதிமுக சிக்கி தவித்த நிலையில், அந்த கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமமல்லாமல் தொண்டர்களையும் சோர்வாக்கியுள்ளது. இதனால் அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுகவில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தவெகவில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தவெகவில் இணைந்தார். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோருடன் முன்னாள் எம்.எல்.ஏக்களும், ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் பல்வேறு கட்சி பொறுப்புகளிலும், ஆட்சி பொறுப்புகளிலும் இருந்த மூத்த தலைவர்களே கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது அதிமுக சிதைந்து வருவதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காங்கிரஸ் - திமுக என்றே அரசியல் களம் இருந்தது. ஆனால் அதிமுக உருவான பின்னர் அரசியல் களம் திமுக - அதிமுக என்று மாறி ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 1977 தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக கூட வரமுடியவில்லை. தற்போது தவெகவின் வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை தற்போது அதிமுகவுக்கும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.