சென்னை, கோப்புபடம் pt web
தமிழ்நாடு

சென்னையில் பட்ஜெட்டுக்கு வாடகை வீடுகள் கிடைப்பது அவ்வளவு கஷ்டமா? தரவுகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது தலைநகர் சென்னையில் வாழ்கிறார்கள் என்று சொல்லுமளவுக்கு மக்கள் அடர்த்தி இருக்கிறது. ஆனால், வாடகை உயர்வு காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பட்ஜெட்டுக்குள் வீடு கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.

PT WEB

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது தலைநகர் சென்னையில் வாழ்கிறார்கள் என்று சொல்லுமளவுக்கு மக்கள் அடர்த்தி இருக்கிறது. ஆனால், வாடகை உயர்வு காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பட்ஜெட்டுக்குள் வீடு கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். எந்தெந்த பகுதியில் வாடகை எவ்வளவாக இருக்கிறது என்பது குறித்த தகவல்களை பெருஞ்செய்தியாகப் பார்க்கலாம்!

நடுத்தர வர்க்க குடும்பம் ஒன்று வீடு வாங்குவதற்காகப்படும் பாட்டை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 3BHK.  நடுத்தர மக்களின் மனநிலையை அறிந்து எடுக்கப்பட்டதாலோ என்னவோ, சின்ன பட்ஜெட்டில் வெளியாகி பெரிய வெற்றியை ஈட்டியது அந்தத் திரைப்படம். அப்படியே சென்னையில் வாடகை வீடு தேடுவோரின் கதையைப் படமாக எடுத்தால், பெரும் சோக காவியமாக மாறிவிடும் போல. அந்தளவுக்கு தற்போது சென்னையில் வாழும்  நடுத்தர மற்றும் வேலைக்குச் செல்பவர்களின் குடும்பங்கள்  3BHK வீட்டை வாடகைக்கு எடுப்பது சவாலான விஷயமாகவே மாறிவிட்டது.

வாடகை வீடு தொடர்பாக NO BROKER இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கை கள நிலவரத்தை ஓரளவுக்குப் புட்டுப்புட்டு வைக்கிறது. அதில்,வேளச்சேரி, ஆவடி, கொளத்தூர், குரோம்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் வீட்டு வாடகை நடப்பாண்டின் 6 மாதங்களில் மட்டும் 10  முதல் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  அடுத்த 6 முதல் 12 மாதங்களில் OMR மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் 10 முதல் 15 சதவீதம் வரை வாடகை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளின் வாடகை 50 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. போரூரில் 2 BHK வீடுகளின் வாடகை 16 ஆயிரம் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரையிலும், சிறுசேரியில் 11 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரையிலும், மேடவாக்கத்தில் 11 ஆயிரத்து 800 ரூபாய் முதல் 15 ஆயிரத்து 200 ரூபாய் வரையிலும், கேளம்பாக்கத்தில் 12 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ரூபாய் வரையிலும் வாடகை உள்ளது. ஆனால், முன்னர் 35 ஆயிரம் ரூபாய் வாடகை இருந்த 3 BHK வீடுகள், தற்போது 42 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து காணப்படுகிறது.

metro railway station

சென்னையில் மெட்ரோ திட்டம், ரிங் ரோடு, ஐடி காரிடார் விரிவாக்கம் போன்ற முக்கிய கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள், நகரத்தின் பல பகுதிகளில் மந்தமான வாடகை சந்தையை சூடுபிடிக்கச் செய்துவிட்டன. சென்னையில் சுமார் 250க்கும் மேற்பட்ட GCC நிறுவனங்கள் செயல்படுகின்றன. கொரோனாவுக்கு பிறகு வீட்டிலிருந்து பணிபுரிவது குறைந்துள்ளதோடு,  அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் வாடகை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுதவிர, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான குடியிருப்புகளைத் தேடுவதும் வாடகை உயர்வுக்கு காரணம் என கூறுகின்றனர். பள்ளிக்கு அருகில் வீடுகள் இருக்க வேண்டும் என பெற்றோர் நினைப்பதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாடகை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

முன்பெல்லாம், வசதி படைத்தவர்கள் மட்டுமே 3BHK வீடுகளை வாங்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போதுள்ள சூழலில், சென்னையில் 3BHK வீடுகளில் வாடகைக்கு குடியேறுவது என்பதே சராசரி குடும்பங்களுக்கு பெரிய கனவாக மாறியுள்ளது.