செய்தியாளர்: V.M.சுப்பையா
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்தநிலையில், டாஸ்மாக் வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடபட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும் என கோரிக்கை வைக்கபட்டது.
அப்போது நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு வந்த போதே உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம் என்றும், இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியுள்ளதாகவும், குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த மனு பொது நலத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவருவதற்கு செய்யபட்டதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மாநில அரசின் உரிமைக்காகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகல் 2.15 மணிக்கு வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.